விராட், குர்னல் அதகளம்... முதலிடத்திற்கு சென்ற பெங்களூரு: டெல்லியை வீழ்த்தி அபாரம்
டெல்லி அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
கே எல் ராகுல் நிதானம்
இதன் மூலம் புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் போரெல் மற்றும் பாப் டு பிளஸ்சிஸ் ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் முறையே 28 மற்றும் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கருண் நாயர் 4 ஓட்டங்கலில் வெளியேற, அடுத்து வந்த கே எல் ராகுல் நிதானமாக விளையாடி 39 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
அணித்தலைவர் அக்சர் பட்டேல் 15 ஓட்டங்களும் அஸ்டோஸ் சர்மா இரண்டு ஓட்டங்களும் எடுக்க டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 34 ஓட்டங்கள் சேர்த்தார். எஞ்சிய வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தலைகீழ் மாற்றிய குர்னல்
இதை அடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது. இதில் ஜாக்கப் போத்தேல் 12 ஓட்டங்கள் எடுக்க விராட் கோலி நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க பெங்களூரு அணி லேசாக தடுமாறியது. எனினும் குர்னல் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தையே தலைகீழ் மாற்றினார்.
47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 73 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் ஐந்து பௌண்டரிகளும், நான்கு சிக்சர்களும் அடங்கும். இறுதியில் டிம் டேவிட் 5 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுக்க, பெங்களூரு அணி 18.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
டெல்லி தரப்பில் அக்சர்பட்டேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களூரு அணி ஏழாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. குஜராத் அணி இரண்டாவது தடத்தையும் மும்பை அணி மூன்றாம் இடத்தையும் டெல்லி அணி நான்காவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |