நடிகர் விவேக்கின் மரணத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! நடிகர், இயக்குனர் கே.வி ஆனந்த் மாரடைப்பால் மரணம்
நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பன்முகத்தன்மை கொண்ட கே.வி ஆனந்த் மாரடைப்பால் தனது 54வது வயதில் காலமானார்.
சென்னையில் கடந்த 1966ஆம் ஆண்டு பிறந்தார் கே.வி ஆனந்த். புகைப்பட பத்திரிக்கையாளராக தன் வாழ்க்கையை தொடங்கிய ஆனந்த் பின்னர் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தார்.
இதன்பின்னர் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், சிவாஜி போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார் ஆனந்த்.
இதோடு கனா கண்டேன், அயன், கோ, அனேகன், கவண், காப்பான் போன்ற மாபெரும் வெற்றி படங்களை அவர் இயக்கினார்.
மேலும் மீரா, சிவாஜி, மாற்றான், கவண் போன்ற படங்களில் ஆனந்த் நடித்துள்ளார். இந்த நிலையில் கே.வி ஆனந்த் இன்று மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் சேர்ந்திருக்கிறார்
ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. கே.வி ஆனந்த் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
நடிகர் விவேக்கின் மரணத்தில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மீண்டு வரும் நிலையில் கே.வி ஆனந்தின் திடீர் மரணம் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.