ஆம்புலன்ஸ் கண்ணாடி வழியே எட்டிப் பார்த்து, கண்ணீர் விட்டு கதறி அழுத கே.வி. ஆனந்த் குடும்பம்
பிரபல இயக்குனரான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்த பலரையும் கண்கலங்க வைத்தது.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், இதனால் அவரே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அதிகாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.
அப்போது, கடந்த 24-ம் தேதி அன்று இயக்குனர் கே.வி.ஆனந்துக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால், அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல், நேரடியாக பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.
ஆம்புலன்சில் ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
மின் மயானத்துக்கு செல்லும் வழியில் அவரது குடும்பத்தினர், அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது வீட்டின் வாசலில் ஆம்புலன்ஸ் சிறிது நேரம் நின்றது.
அப்போது கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள்கள் ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.
அதன் பின் சிறிது நேரத்தில் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டது.