சாலையில் பழுதாகி நின்ற கார் மீது மற்றொரு கார் மோதியதில் பெண் பலி: நெடுஞ்சாலைத்துறை மீதே கொலை வழக்கு பதிவு செய்த அதிகாரி
பிரித்தானியாவில் சாலையில் பழுதாகி நின்ற கார் ஒன்றின்மீது மற்றொரு கார் மோதியதில், அதன் அருகே நின்ற பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.
Sheffieldஐச் சேர்ந்த Nargis Begum (62) என்னும் பெண்மணி தன் கணவருடன் சென்ற கார் நடுவழியில் பழுதாகிவிட, அவர் காரிலிருந்து இறங்கி, காரின் அருகில் நின்றுகொண்டிருந்திருக்கிறார்.
அவரது கணவர் சற்று தொலைவில் நின்றுகொண்டிருக்க, வேகமாக வந்த மற்றொரு கார் Nargisஇன் கார் மீது மோதியதில், அவரது கார் தூக்கி வீசப்பட்டு அவர் மீதே விழுந்துள்ளது.
இந்த கோர விபத்தில் Nargis பலியாக, அவரது கணவரான Mohammed Bashir தன் மனைவி தன் கண் முன்னே கொல்லப்படுவதைக் கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.
பிரித்தானியாவில் ஸ்மார்ட் சாலைகள் என்னும் ஒரு திட்டம் உள்ளது, அதன்படி, சாலை ஒன்றில் கார் பழுதாகி நிற்கும்போது, அதை கமெரா மூலம் கண்காணிக்கும் நெடுஞ்சாலைத்துறையினர், அந்த பகுதியில் எச்சரிக்கை விளக்குகளை எரியவிடுவார்கள். அதைக் கண்டு மற்ற வாகன ஓட்டிகள் எச்சரிக்கையடைந்து விலகிச் செல்வார்கள்..
ஆனால், Nargis விடயத்தில், கார் பழுதாகி நின்று ஆறு நிமிடங்களுக்குப் பின்னரே எச்சரிக்கை விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன.
சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கமெராக்களை கண்காணிப்போர் இந்த விளக்குகளை எரியச் செய்திருக்கவேண்டும்.
ஆனால், அவர்களது தாமதம் ஒரு உயிரை பலிகொண்டு விட்டது. நெடுஞ்சாலைத்துறையோ, தங்கள் கட்டுப்பாட்டு அறையில் 7 அல்லது 8 ஊழியர்கள் மட்டுமே இருப்பதாகவும், ஆனால், 450 கமெராக்களை தாங்கள் கண்காணிக்கவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன் தொடர்ந்து நெடுஞ்சாலைகளை கண்காணிப்பது தங்கள் கொள்கை அல்ல என்றும் அது தெரிவித்துள்ளது.
ஆனால், அவர்களது கவனக்குறைவு காரணமாக உயிர் பலியானதால், நெடுஞ்சாலைத்துறை மீது கொலை வழக்கு தொடர விசாரணை அதிகாரி ஒருவர் முடிவு செய்துள்ளார்.
அவரது இந்த முடிவை Nargis குடும்பத்தார் வரவேற்றுள்ளார்கள். ஸ்மார்ட் சாலைகளில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

