சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை முன்னாள் கேப்டன்!
இலங்கையின் முன்னாள் டெஸ்ட கேப்டன் சுரங்கா லக்மல் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு இலங்கைக்கான இந்திய சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் லக்மல் தெரிவித்துள்ளார்.
எனக்கு இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கியதற்காகவும், எனது தாய் மண்ணின் பெருமையை மீட்டெடுக்க என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் இலங்கை கிரிக்கெட்டுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
எனது தொழில் வாழ்க்கையை வடிவமைத்த மற்றும் எனது தனிப்பட்ட வளர்ச்சியை செழுமைப்படுத்திய வாரியத்துடன் இணைந்து பயணித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று லக்மல் தனது ஓய்வு கடிதத்தில் குறிப்பிட்டு இலங்கை கிரிக்கெட்டுக்கு சமர்ப்பித்துள்ளார்.
சக வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள், துணை ஊழியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் பிற ஆதரவான ஊழியர்கள் அனைவருக்கும் நான் மிகுந்த மரியாதை அளிக்கிறேன் என லக்மல் தெரிவித்துள்ளார்.
சுரங்கா லக்மல் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷலி டி சில்வா கூறியதாவது, லக்மலின் எதிர்கால முயற்சிகள் சிறந்ததாக அமைய வாழ்த்துவதற்கு நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
தேர்வுக்குழு அவரை சுற்றுப்பயணத்திற்கு பரிசீலித்தால், இந்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அவர் நாட்டிற்காக விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
லக்மல், இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்களிப்பாளராக இருந்துள்ளார் மற்றும் அவரது சேவைகள் நினைவுகூரப்படும் என சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை இலங்கை அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லக்மல் 168 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
86 ஒரு நாள் போட்டிகளில் 109 விக்கெட்டுகளும், 11 டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.