சுவிட்சர்லாந்தின் 5-வது பணக்கார குடும்பமாக இடம்பிடித்த இந்திய வம்சாவளி குடும்பம்
Lakshmi Mittal Family Ranks 5th Richest in Switzerland: சுவிட்சர்லாந்தின் 5-வது பணக்கார குடும்பமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் இடம்பிடித்துள்ளது.
செல்வந்தர்களின் பட்டியலில் புதிய சாதனை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி எஃகு தொழிலதிபரான லக்ஷ்மி மிட்டல் (Lakshmi Mittal) குடும்பம், ஸ்விட்சர்லாந்தின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் நேரடியாக 5வது இடத்தைப் பிடித்து கவனம் ஈர்த்துள்ளது.
சுவிஸ் வணிக இதழான Bilanz வெளியிட்டுள்ள 300 செல்வந்தர்களின் பட்டியலில், மிட்டல் குடும்பத்தின் சொத்து மதிப்பு 27 முதல் 28 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், அதாவது சுமார் 32 முதல் 33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் நவம்பர் 26-ஆம் திகதி வெளியிடப்பட்டது. முதல் முறையாக இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த போதிலும், மிட்டல் குடும்பம் நேரடியாக முதல் 5 இடங்களில் ஒன்றைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 26 முதல் 27 பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் சொத்து மதிப்பைக் கொண்ட Safra வங்கி குடும்பத்தை முந்தி மிட்டல் குடும்பம் முன்னிலை பெற்றுள்ளது.
யார் இந்த லக்ஷ்மி மிட்டல்?
76 வயதான லக்ஷ்மி மிட்டல், உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ArcelorMittal-ன் நிர்வாகத் தலைவராக உள்ளார். அவர் 2025-ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் இருந்து ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற மலைப்பிரதேசமான செயின்ட் மோரிட்ஸ் நகருக்கு தனது சட்டபூர்வ குடியிருப்பை மாற்றியிருந்தார்.
பிரித்தானியாவில் பணக்கார வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் நீக்கப்பட்டதும், வாரிசு வரி விதிகள் விரிவுபடுத்தப்பட்டதும் அவரது இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
ArcelorMittal வெற்றியே செல்வத்தின் அடித்தளம்
மிட்டல் குடும்பத்தின் செல்வத்தின் முக்கிய ஆதாரம் லக்சம்பர்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட ArcelorMittal நிறுவனமே ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆதித்யா மிட்டல் (Aditya Mittal) செயல்பட்டு வருகிறார். ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல பகுதிகளில் எஃகு ஆலைகளையும் இரும்புத் தாது சுரங்கங்களையும் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிரிக்காவிலும் ArcelorMittal South Africa மற்றும் லைபீரியாவில் இரும்புத் தாது நடவடிக்கைகள் மூலம் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
கொல்கத்தாவில் வளர்ந்த லக்ஷ்மி மிட்டல், 1970-களில் இந்தோனேசியாவில் தனது முதல் எஃகு வணிகத்தை தொடங்கினார். பின்னர் நஷ்டத்தில் இயங்கிய பல அரசு எஃகு ஆலைகளை வாங்கி வளர்ச்சி கண்ட அவர், 2006-ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு நிறுவனமாக இருந்த Arcelor-ஐ கையகப்படுத்தி உலகளாவிய தொழில் அதிபராக உருவெடுத்தார்.
உலக கவனத்தை ஈர்த்த குடும்பம்
ஸ்விட்சர்லாந்தின் செல்வந்தர்களின் பட்டியலில் மிட்டல் குடும்பம் முதல் ஆண்டிலேயே ஐந்தாவது இடத்தைப் பெற்றிருப்பது, உலக எஃகு துறையில் அவர்களின் செல்வாக்கும் நிதி வலிமையும் தொடர்ந்து உயர்ந்து வருவதை வெளிப்படுத்துகிறது.