பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிரபல இந்திய தொழிலதிபர்
பிரித்தானியாவின் வரிக்கொள்கைகளால் வெறுப்படைந்துள்ள பல கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருகிறார்கள்.
அவ்வகையில், பிரபல இந்திய தொழிலதிபரான லக்ஷ்மி மிட்டலும் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ள லக்ஷ்மி மிட்டல்
லக்ஷ்மி மிட்டல், உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ArcelorMittal மற்றும் Aperam ஸ்டீல் நிறுவனங்களின் தலைவர் ஆவார்.

பிரித்தானியா, சமீபத்தில் non-dom status என்னும் சலுகையில் கைவைத்தது. இந்த non-dom status என்பது என்னவென்றால், பிரித்தானியாவில் வாழும் ஒரு வெளிநாட்டவர், அவருக்கு சொந்தமான தொழில்கள் வேறு நாடுகளில் இருக்கும் நிலையில், அந்த தொழில்களிலிருந்து வரும் வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டியதில்லை.
பிரித்தானியாவில் அவர்கள் ஈட்டும் வருவாய்க்கு மட்டுமே அவர்கள் வரி செலுத்தினால் போதும். ஆனால், பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ், ஏப்ரல் மாதத்தில் இந்த சலுகையை நீக்கிவிட்டார்.
அத்துடன், வரும் பட்ஜெட்டில் பணக்காரர்களைக் குறிவைத்து மற்றொரு வரியையும் சேன்ஸலர் விதிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
இப்படி தாங்கள் குறிவைக்கப்படுவதால் பல பணக்காரர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவரும் நிலையில், லக்ஷ்மி மிட்டல் ஏற்கனவே பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருவதாகவும், எதிர்காலத்தில் துபாயில் காலத்தை செலவிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லக்ஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு, 2,140 கோடி அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |