சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான மொழித்தேர்வுகள் குறித்த சில பயனுள்ள தகவல்கள்
சுவிஸ் குடியுரிமை பெறுவதானாலும் சரி, குடியிருப்பு அனுமதி பெறுவதானாலும் சரி, அவற்றிற்காக விண்ணப்பிப்போர் சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றிலாவது மொழிப்புலமை பெற்றிருப்பதை நிரூபித்தாகவேண்டும்.
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறும் ஒருவர், தான் வாழும் நாட்டுடன் நன்றாக ஒருங்கிணைந்து வாழ்கிறாரா என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஒருவர் நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழ்கிறார் என்றால், அவர் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார விடயங்களில் பங்குபெற்றாகவேண்டும் என்கிறது மாகாண புலம்பெயர்தல் அலுவலகம்.
ஒருவர் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்கிறார் என்பதன் பொருள் என்ன?
சுவிட்சர்லாந்தில் வாழ்வோருக்கு சுவிஸ் மொழி அவசியம். நீங்கள் சுவிட்சர்லாந்துக்கு வரும்போதே உங்களுக்கு சுவிஸ் மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், நீங்கள் சுவிட்சர்லாந்தில் வாழ விரும்புவீர்களானால், உங்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு சுவிஸ் மொழி தெரியும் என்பதை நீங்கள் நிரூபித்தாக வேண்டும்.
நீங்கள் குடியிருப்பு அனுமதி பெற விரும்புகிறீர்களா, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற விரும்புகிறீர்களா அல்லது சுவிஸ் குடியுரிமை பெற விரும்புகிறீர்களா என்பதைப் பொருத்து உங்கள் மொழிப்புலமை அமையவேண்டும் என எதிர்பார்க்கப்படும்.
சுவிட்சர்லாந்தில் பேசப்படும் மொழிகள்
சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை, ஜேர்மன் மொழி, பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி மற்றும் Romansh மொழி ஆகியவையாகும். இந்த Romansh மொழி Graubünden மாகாணத்தில் மட்டுமே பேசப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் ஆங்கிலம் பரவலாக பேசப்பட்டாலும், அது சுவிட்சர்லாந்தின் அதிகாரப்பூர்வ மொழி அல்ல என்பதால், ஆங்கிலப் புலமை, சுவிஸ் குடியுரிமை பெறுவதில் உங்களுக்கு உதவாது.
குடியிருப்பு அனுமதிக்கு எந்த அளவுக்கு சுவிஸ் மொழிப்புலமை வேண்டும்?
குறைந்த கால குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், அதாவது B Permits மற்றும் L Permits பெற்றவர்கள், தங்கள் மொழித்திறனை நிரூபித்துக்காட்டவேண்டிய அவசியம் இல்லை.
நிரந்தரக் குடியிருப்பு அனுமதி தேவைப்படுவோர் எந்த அளவுக்கு சுவிஸ் மொழித்திறன் பெற்றிருக்கவேண்டும்?
சுவிஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கு பல சலுகைகள் கிடைக்கும் என்பதால், அவர்கள் தங்கள் மொழித்திறனை நிரூபித்துக்காட்டவேண்டியது அவசியமாகும்.
சாதாரண நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோர்
சாதாரண நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோர், (ஐந்து முதல் 10 ஆண்டுகள் வாழ அனுமதி பெற்றோர்) சுவிஸ் மொழி ஒன்றைப் பேசுவதில் A2மட்டத்திலும், எழுதுவதில் A1 மட்டத்திலும் மொழித்திறன் பெற்றிருப்பதை நிரூபிக்கவேண்டும்.
விரைவு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோர்
விரைவு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் மொழித்திறன் சற்று அதிகமாக எதிர்பார்க்கப்படும். அப்படிப்பட்டவர்கள், சுவிஸ் மொழி ஒன்றைப் பேசுவதில் B1 மட்டத்திலும், எழுதுவதில் A1 மட்டத்திலும் மொழித்திறன் பெற்றிருப்பதை நிரூபிக்கவேண்டும்.
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு எந்த அளவுக்கு மொழிப்புலமை பெற்றிருக்கவேண்டும்?
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு, ஒருவர் சுவிஸ் மொழி ஒன்றைப் பேசுவதில் B1 மட்டத்திலும், எழுதுவதில் A2 மட்டத்திலும் மொழித்திறன் பெற்றிருப்பதை நிரூபிக்கவேண்டும்.
ஆனால், ஒரு மொழி தெரிந்திருப்பது மட்டுமே போதாது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, நீங்கள் வாழும் பகுதியில் உங்களுக்கு தேர்வுகள் இருக்கும் என்பதால், அந்த இடத்தில், அதாவது உள்ளூர் மட்டத்தில் பேசும் மொழியையும் நீங்கள் அறிந்துவைத்திருக்கவேண்டுவது அவசியமாகும்.
அதாவது, உங்களுக்கு பிரெஞ்சு மொழி நன்கு தெரியும் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், நீங்கள் Schwyzஇல் குடியமர்வீர்களானால், உங்களுக்கு ஜேர்மன் மொழி தெரிந்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும்.
ஆக, மொழிப்புலமை என்பது மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடலாம் என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |