இங்கிலாந்தில் பரவும் Lassa Fever! அதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இங்கிலாந்தில் Lassa Fever என்று நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lassa Fever பாதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் பிப்ரவரி 11 ஆம் தேதி லண்டனின் வடக்கே பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இவர்கள் சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இப்போது காய்ச்சல் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, எப்படி பரவும், எவ்வளவு ஆபத்தானது போன்ற விஷயங்களை விரிவாக காண்போம்.
Lassa காய்ச்சல் என்றால் என்ன?
இது மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. மேலும் இது முதன்முதலில் 1969 இல் நைஜீரியாவில் உள்ள லஸ்ஸாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே இந்த காய்ச்சலுக்கு Lassa காய்ச்சல் என்ற பெயர் வந்தது.
எங்கு கண்டறியப்பட்டது?
Lassa காய்ச்சல் எலிகளால் பரவுகிறது மற்றும் இந்த தொற்று முதன்மையாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
காய்ச்சல் எப்படி பரவுகிறது?
இந்த காய்ச்சலானது பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்ட உணவுப் பொருட்களுடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் போது வரலாம்.
அதோடு பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு கொள்வதாலும் பரவலாம். மொத்தத்தில் இந்த காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.
அறிகுறிகள் என்ன?
லேசான காய்ச்சல், சோர்வு, பலவீனம் மற்றும் தலைவலி போன்றவை லஸ்ஸா காய்ச்சலின் லேசான அறிகுறிகளாகும்.
அதே வேளையில் இரத்தப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், வாந்தி, முக வீக்கம், மார்பு, முதுகு மற்றும் அடிவயிற்று பகுதியில் வலி ஆகியவை இதன் தீவிர அறிகுறிகளாகும்.
இந்த காய்ச்சலின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்ட 1-3 வாரங்களுக்குப் பிறகு தோன்றும். காய்ச்சலுடன் தொடர்புயை மிகவும் பொதுவான சிக்கல் காது கேளாமை ஆகும்.
பல சந்தர்ப்பங்களில், தொற்று ஏற்பட்டவருக்கு காது கேளாமை நிரந்தரமாக இருக்கும்.
எவ்வளவு ஆபத்தானது?
Lassa காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றாலும், பெரும்பாலான மக்கள் இத்தொற்றின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைகிறார்கள்.
இத்தொற்றினால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 1% என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால் இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் விகிதம் 15% ஆகும்.
Lassa காய்ச்சலைத் தடுப்பது எப்படி?
லஸ்ஸா காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே சிறந்த வழி.அதுவும் நோய் பரவும் இடங்களில் உள்ள எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
அதோடு வீட்டிற்குள் எலிகள் நுழைவதைத் தடுக்க போதுமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பேண வேண்டும்.
எலித்தொல்லை அதிகம் இருந்தால் எலிப் பொறிகளை வைத்து பிடித்து அவற்றை அகற்றவும் மற்றும் உண்ணும் உணவுகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.