பரபரப்பான ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கியது. தொடக்க வீரர்களாக அணித்தலைவர் ரோகித் சர்மா, இஷான் கிஷான் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி இருவரும் ஓட்டங்களை குவித்தனர். குஜராத் அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். முதல் 6 ஓவர்களில் 63 ஓட்டங்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 74 ஓட்டங்களாக இருந்தபோது 28 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு கட்டத்தில் 200 ஓட்டங்களுக்கு மேல் மும்பை அணி குவிக்கும் நிலையில் இருந்தது . சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 29 பந்துகளில் 45 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பொல்லார்ட் 4 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார். கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடி காட்டினார், அவர் 21 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள்கள் எடுத்தது.
இதனையடுத்து 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சஹா, ஷுப்மான் கில்லும் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.
அணியின் ஸ்கோர் 106 என இருக்கும்போது ஷுப்மான் கில் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் சஹா 55 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பொருப்புடன் விளையாடி வந்த அணித் தலைவர் ஹர்திக் பாண்ட்யா 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெறும் 2வது வெற்றி ஆகும்.