இதுவரை நடக்காத சம்பவம் ...டெஸ்டில் வரலாறு படைக்குமா நியூசிலாந்து அணி?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து அணி வரலாறு படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (பிப்ரவரி 25) ஆம் தேதி நடக்கவுள்ளது. முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 95 மற்றும் 111 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா அணி சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது.
அதேசமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து அணி வரலாறு படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா ஒருபோதும் இழந்ததில்லை. அதேசமயம் நியூசிலாந்து அணி தங்களது கிரிக்கெட் பயணத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
இதனால் இப்போட்டி டிராவாகும் பட்சத்தில் கூட நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.