1983 உலகக் கோப்பை.. பணம் இல்லாமல் திண்டாடிய பிசிசிஐ! 2 மணிநேரத்தில் லட்ச கணக்கில் நிதி திரட்டி தந்த லதா மங்கேஷ்கர்
மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இசை நிகழ்ச்சி நடத்தி திரட்டிய நிதியை கொண்டு, 1983-இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ பரிசளித்த கதை இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92 வயதில் காலமான செய்தி உலகெங்கிலும் வாழும் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்நதது.
அதேவேளை, நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
லதா மங்கேஷ்கர் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகை ஆவார். 1983ல் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வெகுமதி வழங்க பணம் இல்லாமல் திண்டாடிய பிசிசிஐ-க்கு நிதி திரட்ட, ஒரு ரூபாய் கூட பெறாமல் லதா மங்கேஷ்ர் உதவியுள்ளார்.
அதாவது, 1983ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வெடிகுமதி அளிக்க பணம் இல்லாமல் பிசிசிஐ திண்டாடியுள்ளது.
பிசிசிஐ-யின் பிரச்னைக்கு இந்திய கிரிக்கெட்டைச் சேர்ந்த ராஜ் சிங் துங்கர்பூர் ஒரு தீர்வு கண்டுள்ளார்.
பிசிசிஐ-க்கு நிதி திரட்டும் வகையில் அவர் தனது நெருங்கிய தோழி லதா மங்கேஷ்கரை டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இசை நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டடுள்ளார்.
இதற்கு சம்மதித்த லதா மங்கேஷ்கர், ஒரு ரூபாய் கூட பெறாமல், வெற்றிகரமாக சுமார் 2 மணிநேரம் இசை நிகழ்ச்சி நடத்தி தந்துள்ளார்.
இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியை கொண்டு, உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் 14 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாயை பிசிசிஐ வெகுமதியாக வழங்கியுள்ளது.
இசை நிகழ்ச்சி நடத்தி உதவிய லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், கௌரவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மைதானத்திலும் பிசிசிஐ, அவருக்கு இரண்டு விஐபி டிக்கெட்டுகளை ஒதுக்கி வைத்திருந்து குறிப்பிடத்தக்கது.