மாணவிகளுக்காக பிரான்ஸ் எடுத்துள்ள பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை: வாக்குறுதியை நிறைவேற்றினார் மேக்ரான்
மாணவிகளுக்காக மாதவிடாய் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த டிசம்பரில், மாதவிடாய் வறுமை என்னும் பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல், மாதவிடாய் தயாரிப்புகளை வாங்க இயலாத மாணவிகளுக்காக அவற்றை இலவசமாகவே வழங்கத் துவங்கியுள்ளது பிரான்ஸ் அரசு.
இது குறித்த அறிவிப்பு ஒன்றைச் செய்த பிரான்ஸ் உயர் கல்வி அமைச்சரான Frederique Vidal, மாதவிடாய் தயாரிப்புகளை விநியோகிக்கும் இயந்திரங்கள் வரும் வாரங்களில் மாணவிகள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் பல்கலைக்கழக சுகாதார சேவை மையங்களில் பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதுபோக, அடுத்த கல்வியாண்டிலிருந்து, அதாவது செப்டம்பர் மாதத்திலிருந்து, அனைத்து மாணவிகளுக்குமே மாதவிடாய் தொடர்பான தயாரிப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகில் அதிகம் பேசப்படாத விடயங்களில் இந்த ‘மாதவிடாய் வறுமை’ என்பது ஒன்றாகும். மாதவிடாய் வறுமை என்பது, கழிவறைகள், சுத்தமான தண்ணீர் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை கிடைக்காத ஒரு நிலைமையாகும்.
பல நாடுகளில் இந்த அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பெண்கள் அவதியுற்றுவருகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழல் பல்வேறு நாடுகளில் நிலவும் நிலையில், அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த நவம்பரில் அறிமுகம் செய்ததையடுத்து, உலகிலேயே தன் நாட்டு பெண்களுக்கு மாதவிடாய் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஸ்காட்லாந்து.
இங்கிலாந்திலும் குறிப்பிட்ட வயதுள்ள மாணவிகளுக்கு இலவசமாக மாதவிடாய் தயாரிப்புகள் வழங்கப்படும் நிலையில், நியூசிலாந்தும் தன் மாணவிகளுக்கு இலவசமாக மாதவிடாய் தயாரிப்புகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்ற வாரம் அறிவித்தது.
பிரான்சைப் பொருத்தவரை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், டிசம்பர் மாதம் பேசும்போது மாதவிடாய் வறுமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், அவர் சொன்னதை இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றியும் விட்டார்!