ஆட்சியைக் கைப்பற்றுவோம்... ராணுவ முடிவுகளும் உறுதி: பிரான்ஸ் தலைவர் Le Pen திட்டவட்டம்
பிரான்ஸ் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என தீவிர வலதுசாரி தலைவரான Marine Le Pen நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Le Pen கட்சி அறுதிப் பெரும்பான்மை
ஆட்சியைக் கைப்பற்றியதும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் Le Pen தெரிவித்துள்ளார். இதில் உக்ரைன் தொடர்பான முடிவுகளும் உட்படும் என்றார்.
ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் திகதிகளில் நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தாலும் நாட்டின் ஜனாதிபதியாக இமானுவல் மேக்ரானே தொடர்வார். ஆனால் நாடாளுமன்ற அவைகளில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் என்றே வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளில் தெரியவருகிறது.
அத்துடன் Le Pen உடைய தீவிர வலதுசாரி கட்சியே புதிய நாடாளுமன்றத்தில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் Le Pen கட்சி அறுதிப் பெரும்பான்மையை வெல்வது உறுதி அல்ல என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.
மொத்தம் 577 ஆசனங்கள் கொண்ட பேரவையில் 220 முதல் 260 ஆசனங்கள் வரையில் Le Pen கட்சி மற்றும் அதன் கூட்டணிகள் கைப்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில், தமது ஆதரவாளரான Jordan Bardella-வை பிரதமராக தெரிவு செய்வதை விட இமானுவல் மேக்ரானுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்றார்.
உக்ரைன் தொடர்பில் Le Pen கட்சி
இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் 2027ல் முடிவடைகிறது. ஆனால் ஜனாதிபதியை பகைத்துக் கொள்ளாமல், அதேவேளை உறுதியாக செயல்படும் துணிவு தமது ஆதரவாளரான Jordan Bardella-க்கு இருப்பதாக Le Pen தெரிவித்துள்ளார்.
மேலும், பிரான்சின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்பது நாட்டின் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு கௌரவப் பட்டமாகும். ஆனால் அதன் உண்மையான அதிகாரம் பிரதமருக்கு என்பதால், ஜனாதிபதி தன்னிச்சையாக உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் முடிவை எடுக்க முடியாது என்றார் Le Pen.
இதனால், தேர்தலுக்கு பிறகு உக்ரைன் தொடர்பில் Le Pen கட்சி முக்கிய முடிவெடுக்கும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, பிரான்சில் பல்வேறு அரசியல் சூழலுக்கு மத்தியில் தற்போது தீவிர வலதுசாரி கட்சியான National Rally நாட்டின் ஒடுக்கப்பட்ட சாதாரண மக்களின் தெரிவாக மாறியுள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |