கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையை யார் வெல்வார்? ஜாம்பவான் ரொனால்டோ கணிப்பு
கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்று பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ கணித்துள்ளார்.
ரொனால்டோ நசாரியோ
பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ (Ronaldo Nazario) கத்தாரில் நடைபெற்று வரும் 2022 FIFA உலகக் கோப்பையின் வெற்றியாளருக்கான தனது கணிப்பைப் பகிர்ந்துள்ளார்.
பிரான்ஸ், மொராக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரோஷியா ஆகிய நான்கு அணிகள் எஞ்சியிருக்கும் இந்த போட்டி அரையிறுதியை எட்டியுள்ளது.
நாளை (டிசம்பர் 13) நடைபெறும் முதல் அரையிறுதியில் குரோஷியாவை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது, மறுநாள் மொராக்கோவை பிரான்ஸ் எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் என்று பலராலும் கூறப்பட்ட பிரேசில், காலிறுதியில் பெனால்டியில் குரோஷியாவிடம் தோற்று வெளியேறியது.
இந்நிலையில், 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்று பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ கணித்துள்ளார்.
பிரான்ஸ் அணி
2022 FIFA உலகக் கோப்பையில் பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப் போட்டியைக் காணும் என எதிர்பார்ப்பதாக ரொனால்டோ கூறினார். ஆனால், பிரேசில் அணி காலிறுதியில் வெளியேறியதால், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி அதன் டைட்டிலை தக்கவைத்துக்கொள்ளும் என்று அவர் கணித்துள்ளார்.
கைலியன் எம்பாப்பே
மேலும், பிரான்ஸ் அணியில் ஐந்து கோல்களுடன் கோல்டன் பூட் பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappé) குறித்து புகழ்ந்து பேசிய ரொனால்டோ, அவர் ஒரு சிறந்த உலகக் கோப்பையைக் கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு நம்பமுடியாத திறமைகள் உள்ளன என்றும் கூறினார்.