லண்டனில் நடந்த கோர சம்பவம்: பொதுமக்களால் கொண்டாடப்படும் டீ கடை ஊழியர்
லண்டனின் லெய்செஸ்டர் சதுக்கத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட டீ கடை ஊழியரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிறுமியின் முகத்தில் காயம்
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 32 வயது நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திங்களன்று பரபரப்பான லெய்செஸ்டர் சதுக்கத்தில் 11 வயது சிறுமியும் அவரது தாயாரும் கத்தியால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார். வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், சிறுமியின் முகத்தில் காயம்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 32 வயது தாக்குதல்தாரி கைதாகியுள்ளார்.
சிறுமியின் தாயார் லேசான காயங்களுடன் தப்பியதாகவே கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சமயோசிதமாக செயல்பட்ட டீ கடை ஊழியர் 29 வயது அப்துல்லா தாக்குதல்தாரியை எதிர்கொண்டு, கத்தியை அந்த நபரிடம் இருந்து பறித்துள்ளார்.
TWG டீ கடையில் கடந்த 8 மாதங்களாக அப்துல்லா பணியாற்றி வருகிறார். திடீரென்று அலறல் சத்தம் கேட்டதும், சுதாரித்துக்கொண்டு வெளியே சென்று பார்த்ததாகவும், அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் கத்தியுடன் காணப்பட்டதையும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
அது தன்னுடைய கடமை
உடனடியாக அந்த நபர் மீது பாய்ந்து, கத்தியை அவரிடம் இருந்து பறித்ததாகவும் அப்துல்லா தெரிவித்துள்ளார். அங்கிருந்த மேலும் இருவர் இணைந்து, பொலிசார் சம்பவயிடத்திற்கு வரும் வரையில் அந்த நபரை தப்பவிடாமல் பார்த்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுமி ஒருவர் தாக்கப்பட்டுள்ளதை அறிந்து அவர்களை காப்பாற்ற சென்றதாகவும், அது தன்னுடைய கடமை என்று உணர்ந்து இதை செய்துள்ளதாகவும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்கு இரையான இருவருக்கும் தாக்குதல்தாரிக்கும் தொடர்பில்லை என்றே தெரிய வந்துள்ளது. காயம்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லெய்செஸ்டர் சதுக்கத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்படும் இந்த பகுதியில் நடந்த சம்பவம் அதிக கவனம் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |