ட்ரம்பால் அமெரிக்கா செல்வதைத் தவிர்க்கும் ஜேர்மானியர்கள்
ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து அமெரிக்கா செல்லும் ஜேர்மானியர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா செல்வதைத் தவிர்க்கும் ஜேர்மானியர்கள்
2025ஆம் ஆண்டு, ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ஜேர்மானியர்கள் எண்ணிக்கை 17.8 சதவிகிதம் குறைந்து 17,100 ஆகியுள்ளதாக ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டு கோவிட் காலகட்டத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்குச் செல்லும் ஜேர்மானியர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்துள்ளது இப்போதுதான் என்கிறது ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம்.
அத்துடன், அதே காலகட்டத்தில், அமெரிக்காவிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை 3.4 சதவிகிதம் அதிகரித்து, 19,300 ஆகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஜேர்மனிக்கு வருவோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக உள்ளதும் இப்போதுதான் என்கிறது ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம்.
REUTERS/Lisi Niesner Purchase Licensing Rights
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவும் குறைந்துள்ளது. ஜனவரி முதல் ஆகத்து வரையிலான காலகட்டத்தில் 1.96 மில்லியன் அமெரிக்கர்கள் ஜேர்மனிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இது, 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 3.2 சதவிகிதம் குறைவாகும்.
கோடையிலோ, குறிப்பாக ஜூலையில், ஜேர்மனிக்கு வரும் அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 10.2 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
அமெரிக்க எல்லையில் பல ஜேர்மானியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் மாதத்தில், தனது பயண ஆலோசனையில், அமெரிக்கா செல்வதற்கான விசா அல்லது விலக்கு மட்டுமே அமெரிக்கா செல்வதற்கான உத்தரவாதமாக அமையாது என தன் குடிமக்களுக்கு ஜேர்மனி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |