மின்சாரத்தை துண்டித்துவிடுவோம்... பழிக்குப் பழி வாங்குவோம் என பிரித்தானியாவை மிரட்டும் பிரான்ஸ்
பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, பிரித்தானிய தீவு ஒன்றிற்கு செல்லும் மின்சாரத்தைத் துண்டித்துவிடுவோம் என பிரான்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது. சமீபத்தைய சில வாரங்களாகவே பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மீன் பிடித்தல் தொடர்பில் உரசல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
கடந்த வெள்ளியன்று, படகுகளை கண்காணிக்கும் தொழில்நுட்பம் கொண்ட 41 பிரான்ஸ் நாட்டு மீன் பிடி படகுகளுக்கு மட்டும் பிரித்தானியாவுக்கு சொந்தமான ஜெர்சி (Jersey) தீவு பகுதியில் மீன் பிடிக்க பிரித்தானியா அங்கீகாரம் அளித்தது. அத்துடன், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் பிரித்தானியா விதித்துள்ளது.
பிரித்தானியா விதித்துள்ள அந்த புதிய கட்டுப்பாடுகள், எங்கெல்லாம் பிரான்ஸ் மீன் பிடிப் படகுகள் செல்லலாம், எங்கு செல்லக்கூடாது, கடலில் எத்தனை நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்கலாம், அவர்கள் படகுகளில் என்னென்ன இயந்திரங்கள் வைத்திருக்கலாம் என்பது குறித்தெல்லாம் தெரிவிக்கின்றன.
ஆனால், அவை குறித்து பிரான்சுடன் பிரித்தானியா கலந்தாலோசிக்கவில்லை என்றும், அவை குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் பிரான்ஸ் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
தங்களைப் பொருத்தவரை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, ஜனவரி 1 அன்று இரு நாடுகளும் மீன் பிடித்தல் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தாங்கள் மிகச்சரியாக கடைப்பிடிப்பதாகவும், அதற்குப் பிறகு கட்டுப்பாடுகள் ஏதாவது விதிக்கப்படுமானால், அவை ஐரோப்பிய ஒன்றியம் வழியாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டாலன்றி அவை செல்லுபடியாகாது என்றும் பிரான்ஸ் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பிரித்தானியாவின் நடவடிக்கைகள் பிரான்சுக்கு எரிச்சலூட்டி வருவதால், பிரித்தானிய தீவான ஜெர்சி தீவுக்கு பிரான்சிலிருந்து செல்லும் மின்சாரத்தை தடுத்துவிடுவோம் என மிரட்டும் நிலைக்கு பிரான்ஸ் வந்துவிட்டது.
பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சரான Annick Girardin, பிரான்ஸ் பழிவாங்கக்கூட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, பிரான்சிலிருந்து ஜெர்சி தீவுக்கு செல்லும் கடலடி கேபிள்கள் செல்லும் நிலையில், மின்சாரத்தை துண்டித்துவிடுவோம் என்று கூறியுள்ளார் Annick.
இப்படி ஒரு சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறியுள்ள Annick, ஆனாலும், பிரான்சிடம் கலந்தாலோசிக்கமலே பிரித்தானியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் தன்னை பழிவாங்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு, பிரான்சுக்கும், பிரித்தானிய தீவான ஜெர்சிக்கும் இடையில், 40 மில்லியன் பவுண்டுகள் செலவில் கடலுக்கடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டதும், அதன் மூலமாகத்தான் ஜெர்சி தீவுக்கு பிரான்சிலிருந்து மின்சாரம் செல்வதும் குறிப்பிடத்தக்கது.