சுவிஸ் C Permit குறித்து அறிந்துகொள்வோம்...
சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் C Permit அல்லது The ‘Settled Foreign Nationals’ C permit என்பது ஐரோப்பிய ஒன்றிய மற்றும் EFTA நாட்டவர்களுக்கு, அவர்கள் ஐந்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த பிறகு கொடுக்கப்படும்.
ஆனால், மற்ற வெளிநாட்டவர்கள் (அமெரிக்கர்கள் மற்றும் கனேடியர்கள் தவிர்த்து) இந்த C Permitஐ பெறவேண்டுமானால், அவர்கள் இடைவெளியில்லாமல் 10 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருந்தால் மட்டுமே அதற்காக அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இது நீண்ட காலகட்டமாக தோன்றினாலும், தாங்கள் வெற்றிகரமாக சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்வதாக நிரூபிப்பவர்கள், தேவையான விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில், அவர்கள் C Permit பெறும் நடைமுறையை வேகப்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பே விண்ணப்பிக்கலாம்.
சுவிட்சர்லாந்தில் நீண்டகாலம் வாழ விரும்புபவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கவல்லது இந்த C Permit.
நீங்கள் வெளிநாடு செல்லும்பட்சத்தில் இந்த C Permitஐ ஃப்ரீஸ் செய்ய முடியும், ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு நீங்கள் மாறலாம், கட்டுப்பாடுகளின்றி மாகாணம் விட்டு மாகாணம் மாறி வாழலாம். இந்த C Permit இருந்தால், சொத்து வாங்கும் நேரத்தில் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை.
ஆனாலும், பெடரல் மட்டத்தில் வாக்களிக்க மட்டும் உங்களுக்கு உரிமை கிடையாது.
முக்கியமான விடயம், நீங்களே இந்த C Permitஐ கோரலாம். வெளிநாட்டவர்கள் தங்கள் B permit புதுப்பித்தல் படிவத்தில் நேரடியாக மாகாண அதிகாரிகளிடம் இந்த C Permitஐ கோரலாம். சுவிஸ் புலம்பெயர்தல் சட்டத்தரணி ஒருவரின் உதவியை பெறுவது நலம்பயக்கும்.
நீங்கள் விண்ணப்பித்து மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் உங்களுக்கு முதல் பதில் கொடுக்கப்படும். மொத்த நடைமுறையுமே முடிவடைய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகாது என்கிறார் புலம்பெயர்தல் துறையில் பொறுப்பு வகிக்கும் Adrian Tüscher.
C Permitஐப் பெற, சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்வதுடன், மொழிப்புலமையும் அவசியம் ஆகும்.
பொதுவாகக் கூறினால், பேசுதல் மற்றும் கவனித்தலில் B1 மட்டமும், எழுதுவதில் A1 மட்டமும் தேவை. ஆனாலும், மாகாணங்கள் பல இதற்கு அதிகமாகவும் எதிர்பார்க்கலாம்.
கவனத்தில் கொள்ளவேண்டிய மற்ற விடயங்கள் என்னென்ன?
- சுவிட்சர்லாந்துக்கு வெளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்குதல், ஐந்து ஆண்டுகள் B permit வைத்திருக்கும் விதிமுறைக்கு இடையூறை ஏற்படுத்தலாம்.
- தற்காலிக உரிமம் பெற்று படிக்கும் மாணவர்கள், வேலை ஒன்றைத் தேடிக்கொள்வதுடன், C permitக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதை B work permit ஆக மாற்றிக்கொள்ளவேண்டும்.
- C permit பெருவது மட்டுமல்ல, அதை முறையாக பராமரிக்கவும் வேண்டும்.
- சட்டப்படி கடுமையான குற்றச்செயல் ஒன்றில் ஈடுபடுதல், அரசின் நிதி உதவியை நம்பியிருத்தல், கடன் முதலானவை உங்கள் C permitஐ இழக்க வழிவகை செய்யலாம்.
- நீங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கினாலும், அதிகாரிகள் உங்கள் C permitஐ ரத்து செய்ய முடியும். ஆகவே, வெளிநாடு செல்லவேண்டுமானால், அதற்கேற்ற வகையில் உங்கள் C permitஐ தற்காலிகமாக ரத்து செய்ய விண்ணப்பித்தால், நான்கு ஆண்டுகள் வரை நீங்கள் உங்கள் C permitஐ இழக்காமலே வெளிநாடு ஒன்றில் வாழலாம்.