போர்சூழ்ந்த ஹார்முஸ் நீரிணையில் நீந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரித்தானிய நீச்சல் வீரர்
Lewis Pugh Swims Hormuz to Highlight Marine Risk: பிரித்தானிய நீச்சல் வீரர் ஒருவர் போர்சூழ்ந்த ஹார்முஸ் நீரிணையில் நீந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் நீந்தி விழிப்புணர்வு
பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீரரான லூயிஸ் பியூ (Lewis Pugh), போர் பதற்றம் நிலவும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நீந்தி, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலோர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்துகளை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
56 வயதான லூயிஸ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு கடல்களில் நீண்டதூர நீச்சல்களை மேற்கொண்டவர்.

3 நாட்கள் நீந்தினார்
இம்முறை அவர் உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் 3 நாட்கள் நீந்தினார்.
இந்த முயற்சியின் மூலம் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் கடல் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை எடுத்துக்காட்ட முயன்றார்.
தண்ணீரே தீப்பிடித்து எரிந்தது!
நீச்சலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு பெரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதை அவர் நேரில் கண்டதாகவும் கூறினார். இதையடுத்து போர் விமானங்கள் வானில் பறந்ததால் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார்.
அச்சுறுத்தலான சூழ்நிலையிலும் அவர் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நீந்தி தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். ஐ.நா. சின்னம் பொறிக்கப்பட்ட நீச்சல் தொப்பியை அணிந்து, 3 நாட்களில் மொத்தம் ஆறரை மணி நேரம் கடலில் இருந்தார். இரண்டாவது நாளில் மற்றொரு தாக்குதலுக்குள்ளான கப்பலைக் கடந்தபோது, வானத்தைத் தொடும் அளவுக்கு தீப்பிழம்புகள் எழுந்ததை கண்டதாக அவர் கூறினார்.
“கப்பலைச் சுற்றியிருந்த தண்ணீரே தீப்பிடித்து எரிந்தது. ரசாயனங்களின் துர்நாற்றம் இன்னும் மனதில் உள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் சேதம்
ஹார்முஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், டால்பின்கள், கடல் ஆமைகள், மாங்குரோவ் காடுகள் மற்றும் பவளப்பாறைகள் நிறைந்த வளமான கடல் சூழலையும் கொண்டுள்ளது. ஆனால் கப்பல் தாக்குதல்கள், எண்ணெய் கசிவுகள் மற்றும் ரசாயன மாசுபாடுகள் இந்த உயிரியல் அமைப்புகளுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக லூயிஸ் எச்சரித்துள்ளார்.
“இந்த சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து மீள பல ஆண்டுகள், ஏன் பல தசாப்தங்கள்கூட தேவைப்படலாம்,” என்று அவர் கவலை தெரிவித்தார். இந்த நீச்சல் முயற்சி மூலம் போர் மட்டுமல்ல, அதன் சுற்றுச்சூழல் விளைவுகளையும் உலகம் கவனிக்க வேண்டும் என்ற செய்தியை அவர் வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |