அரிய வாய்ப்பு... விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகள்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி தனது பங்குகளில் 6.5 சதவீதத்தை விற்பனை செய்ய உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் பங்குகளில், அதிகபட்சமாக 6.5 சதவீதத்தை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலை 382 ரூபாய்
காப்பீட்டு சேவையை இந்தியாவில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் வழங்கும் வகையில் எல்ஐசி நிறுவனமானது தொடங்கப்பட்டு மிகப்பெரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எல்ஐசியின் பங்குகளை அதிகபட்சம் 6.5 சதவீதம் வரை விற்பனை செய்ய இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம் என்றும், சில்லறை முதலீட்டாளர்கள் புதன்கிழமை முதல் ஏலத்தில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு முதற்கட்டமாக 2.5 சதவீத பங்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது. மேலும் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதலாக 4 சதவீத பங்குகளை விற்கும் திட்டத்திலும் ஈடுபட உள்ளது.
ஒரு பங்கிற்கான குறைந்தபட்ச விலை 382 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போது எல்ஐசி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்கு 96.5 சதவீதமாக உள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின் அடிப்படையில் பங்குகள் விற்கப்பட்டால் அரசின் பங்கு 90 சதவீதமாக குறையும்.
பொதுமக்களின் பங்கு
பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விதிகளின்படி எல்ஐசி நிறுவனத்தில் அரசின் பங்குகளை 2027 மே மாதத்திற்குள் குறைந்தபட்சம் 90 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இந்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்குள் அடைய இந்த பங்கு விற்பனை உதவும் என எல்ஐசி தெரிவித்திருக்கிறது. ஒரு பங்கின் விலை 382 ரூபாய் என்ற அடிப்படையில் 6.5 சதவீத பங்குகளும் விற்கப்பட்டால் இந்திய அரசுக்கு சுமார் 26,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை நடப்பு நிதியாண்டில் இந்திய அரசு ரூ 2121 கோடி அளவுக்கு முதலீட்டு விலகல் (Disinvestment) மூலம் வருவாய் ஈட்டி இருக்கிறது. எல்ஐசி பங்குகளும் வெற்றிகரமாக விற்கப்பட்டால் இந்திய அரசின் மொத்த வருவாய் ரூ 47,201 கோடியாக உயரும்.
2026-2027-ம் நிதி ஆண்டில் முதலீட்டு விலகள் மற்றும் அரசு சொத்துக்களை பணமாக்குதல் (Asset Monetisation) மூலம் சுமார் 80,000 கோடி ரூபாயை திரட்ட இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுவரை அந்த இலக்கில் சுமார் 35 சதவீதத்தை இந்திய அரசு எட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டு எல்ஐசியின் ஐபிஓ மூலம் அரசு 3.5 சதவீதம் பங்குகளை விற்றது.
அதன்படி பொதுமக்களின் பங்கு விகிதத்தை படிப்படியாக உயர்த்துவதற்காக செபி கால அவகாசம் வழங்கியது. 2027 மே மாதத்திற்குள் எல்ஐசியில் பொது மக்களின் பங்கு 10 சதவீதமாக இருக்க வேண்டும்.
2032-குள் இது 25 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். இந்த புதிய பங்கு விற்பனை மூலம் அந்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே அடைய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், எல்ஐசியின் பங்குகளை வாங்க மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |