கார் பந்தயத்தில் கலந்துகொண்ட கனேடிய எண்ணெய் நிறுவன உரிமையாளர்: கவனக்குறைவால் பறிபோன உயிர்
கனேடிய எண்ணெய் நிறுவன உரிமையாளரான கோடீஸ்வரர் ஒருவர் விபத்தில் கொல்லப்பட்ட நிலையில், அவர் மீது மோதிய ட்ரக்கின் சாரதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கால்கரியைச் சேர்ந்த கோடீஸ்வரரான Ron Carey (80), 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 3ஆம் திகதி, லண்டனிலிருந்து பிரைட்டன் நோக்கிச் செல்லும் பழங்கால கார்கள் அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அப்போது அவர் தவறுதலாக நெடுஞ்சாலை ஒன்றிற்கு வந்துவிட்டிருக்கிறார். நெடுஞ்சாலையில் அவரது கார் பயணிக்கும்போது, வேகமாக வந்த ட்ரக் ஒன்று அவரது காரின் பின்னால் மோதியுள்ளது.
அந்த விபத்தில் Ron சம்பவ இடத்திலேயே பலியாக, அவரது மனைவியான Billi படுகாயமடைந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் லண்டன் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, அவர் பிழைத்துக்கொண்டார்.
இந்நிலையில், ட்ரக்கை செலுத்திவந்த Michael Black (52) என்பவர், தனது நண்பர் ஒருவரை மொபைலில் அழைக்க முயன்று கொண்டிருந்ததாகவும், வெகு நேரம் முயன்றும் அவரது நண்பர் அழைப்பை ஏற்காத வெறுப்பில் இருந்த நிலையில், அவர் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த Ronஉடைய காரை கவனிக்கவில்லை என்றும், அதனாலேயே விபத்து ஏற்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Michaelக்கு 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர் 22 மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடப்பதற்கு சற்று முன் வரை தன் கணவர் தன்னுடன் ஜோக்கடித்து சிரித்துக்கொண்டிருந்த நிலையில், விபத்தைத் தொடர்ந்து தான் மருத்துவமனையில் கண் விழித்தபோது அவர் உயிருடன் இல்லை என அறிந்தபோது, தன் வாழ்வே முற்றிலும் மாறிப்போனதாகவும், அந்த காயம் ஆறிவிடும் என தான் நம்பியிருந்ததாகவும், ஆனால், அது ஆறவில்லை என்றும் துயரத்துடன் தெரிவித்துள்ளார் Ronஇன் மனைவியான Billi.