காதலர் தின பரிசான பலூனால் பறிபோன குழந்தையின் உயிர்: ஒரு எச்சரிக்கை செய்தி
பிரித்தானியாவில் எட்டு மாத குழந்தை ஒன்றின் உயிரை ஒரு பலூன் பறித்துள்ள திடுக்கிடவைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டரில் வாழும் Jackenson Lamour, Brandy Kimberley Harvey தம்பதியரின் மகள் மலேசியா. எட்டு மாதக் குழந்தையான மலேசியாவை தாயும் தந்தையுமே மாறி மாறி கவனித்து வந்துள்ளார்கள்.
கணவன் இரவுப்பணிக்கு செல்ல, மனைவி பகல் நேரப் பணியிலிருந்து திரும்பி குழந்தையை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
இரவு 10 மணியளவில் சமையலறைக்கு சென்று கொஞ்சம் பாத்திரம் கழுவலாம் என முடிவு செய்திருக்கிறார் Kimberley.
சமையலறையும் படுக்கையறையும் வெகு தூரத்தில் இல்லை என்பதால், குழந்தையின் சத்தத்தை கவனித்தவாறே வேலை செய்துகொண்டிருந்த Kimberley, திடீரென குழந்தை அமைதியானதை கவனித்திருக்கிறார்.
என்ன ஆயிற்று என பார்க்க வந்த Kimberley கண்ட காட்சி அவரை பதற வைத்துள்ளது. Jackenson, காதலர் தினத்திற்காக மனைவிக்கு ஒரு இதய வடிவ பலூனை வாங்கிவந்துள்ளார்.
அது மிகவும் பிடித்துப்போகவே, அதை தங்கள் கட்டிலில் கட்டி வைத்துள்ளார் Kimberley. எட்டு மாதக் குழந்தையான மலேசியா, அந்த பலூனை எட்டி எடுக்க முயன்றிருக்கிறாள் போலும். அந்த பலூனின் நூல் அவளது கழுத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
கட்டிலிலிருந்து அவள் கீழே சரியவும், அந்த பலூனில் கட்டப்பட்டிருந்த நூல் அவளது கழுத்தை இறுக்க, குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறாள்.
உடனே அந்த நூலை வெட்டிவிட்டு, அவசர உதவியை அழைத்திருக்கிறார் Kimberley. ஆனால், மருத்துவ உதவிக்குழுவினரால் மலேசியாவைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கிறது.
அதே நேரத்தில், பொலிசார் வந்து அக்கம்பக்கத்தில் அந்த குடும்பத்தைக் குறித்து விசாரித்திருக்கிறார்கள். அதில், மலேசியாவின் பெற்றோர் குழந்தையை மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொள்பவர்கள் என அனைவருமே சாட்சியமளித்துள்ளார்கள்.
ஆகவே, மலேசியா இறந்தது விபத்துதான் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. என்றாலும், ஒரு பலூனில் கட்டப்பட்டிருக்கும் நூல் கூட ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்கமுடியும் என்ற எச்சரிக்கை செய்தியை தெரிவித்துள்ளது இந்த துயர சம்பவம்!