ஒருதலை காதலால் சுவிஸ் இளைஞரின் கொடுஞ்செயல்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
சுவிட்சர்லாந்தின் Freiburg மாநிலத்தில் 19 வயது இளம் பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணையில், இளைஞரின் நடவடிக்கை முழுமையும் மிருகத்தனம் என்றே நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் இளைஞர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 70,000 பிராங்குகள் இழப்பீடு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2017 நவம்பர் மாதம் 21 வயதான இளைஞர் தமது நெருங்கிய தோழியை ஆசை வார்த்தை கூறி Freiburg மாநிலத்திற்கு வரவழைத்துள்ளார்.
தொடர்ந்து Neuchâtel ஏரிக்கு அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த சுத்தியலால் அந்த 19 வயது பெண்ணின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். சுயநினைவிழந்து சரிந்த அவரை, துஸ்பிரயோகம் செய்த அந்த இளைஞர் பின்னர் கைகளை கட்டி ஏரியில் மறைவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
2018 ஜனவரி மாதம் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட, இந்த வழக்கு பூதாகரமாக வெடித்தது. கைகள் கட்டப்பட்டு உள்ளாடைகள் நீக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவரது சடலம் மிக மோசமான கோலத்தில் இருந்ததால், அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது கடும் குளிர் காரணமாக இறந்தாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது நெருங்கிய தோழியான குறித்த பெண் காதலை நிராகரித்ததாலையே கொலைக்கு தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள அந்த இளைஞர், தமக்கு அளித்த தண்டனை தொடர்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.