உலகக்கோப்பையை நாங்களே வெல்ல விரும்புகிறோம்! கண்ணீர் தழும்ப உணர்ச்சிபூர்வமாக பேசிய மெஸ்ஸி
முதல் போட்டியில் மோசமான தோல்வியிலிருந்து மீண்டு தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என மெஸ்ஸி கூறியுள்ளார்.
லியோனல் மெஸ்ஸி
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் அர்ஜென்டினா அணி நுழைந்துள்ளது. அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியிடம், அந்நாட்டு கால்பந்து தொகுப்பாளரான சோபியா மார்டினெஸ் ஒரு உரையாடல் நடத்தினார்.
அப்போது,இறுதிப்போட்டியில் முடிவுகள் எதுவாக இருந்தாலும், கோப்பையை கடந்து உங்களிடமிருந்து யாராலும் எடுக்க முடியாத ஒன்று இருக்கிறது. அதை நான் தீவிரமாக நம்புகிறேன். அது மக்கள் உங்கள்மேல் வைத்துள்ள அன்பு. இப்போதுகூட அர்ஜென்டினாவில், மெஸ்ஸியின் கால்பந்து அணி சட்டையை வைத்திராத ஒரு குழந்தை கூட இல்லை.
உண்மையாகவே, நீங்கள் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரது வாழ்க்கையிலும் முத்திரையை பதித்துள்ளீர்கள், பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்ததற்கு நன்றி என்றார்.
இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது மகிழ்ச்சி
இதை கேட்டு கண்ணீர் தழும்ப பேசிய ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, மிக்க நன்றி, உண்மை என்னவென்றால் என்னால் இவ்விஷயங்களை உணர முடிகிறது. மக்களின் அளவிடமுடியாத அன்புக்காக, நாங்கள் எங்களின் மொத்த நேரத்தையும் கொடுத்து வாழ்கிறோம்.
இந்த உலகக்கோப்பையில் மற்ற எந்த அணிகளை விடவும் நாங்களே கோப்பையை வெல்ல அதிகம் விரும்புகிறோம் என சொல்லலாம். முதல் போட்டியின் ஒரு மோசமான தோல்வியிலிருந்து மீண்டு வந்த நாங்கள், தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
மக்கள், வெற்றி அல்லது தோல்விக்கு மட்டுமே மதிப்பு கொடுக்காமல், உழைப்புக்கும் அதிக மதிப்பு தருவதை நான் உணர்கிறேன். நிச்சயம் இறுதிப்போட்டியில் எங்களுடைய சிறந்த திறனை கொடுப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.