அதிகரிக்கும் Liquid Gold இறக்குமதி... தங்கம் கடத்த கடத்தல்காரர்களின் புதிய கண்டுபிடிப்பு
இந்தியாவில் திடீரென்று Liquid Gold இறக்குமதி அதிகரிப்பால், அரசாங்கத்திற்கு வரி விகிதத்தில் ரூ 906 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரவத் தங்கம்
பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கக் கடத்தல் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது. சுங்க வரிகளைத் தவிர்ப்பதற்காக, தங்கத்தை உடலிலோ அல்லது பயணப் பைகளிலோ மறைத்து வைத்து இந்தியாவுக்குள் கடத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது பறிமுதல் சிக்கல் மற்றும் கைதாகும் பயமேதுமில்லாமல் தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்துவதற்கான ஒரு புதிய வழியைக் கடத்தல்காரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் அதிக அளவில் தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வர அவர்களால் முடிகிறது. தங்கத்தின் இரசாயன சேர்மங்களாக திரவத் தங்கம் வடிவில் இந்த இறக்குமதி நடத்தப்படுகிறது.
'திரவத் தங்கம்' என்பது தங்கத்தை மற்ற இரசாயனத் தனிமங்களுடன் கலந்து உருவாக்கப்படும் ஒரு சேர்மமாகும், இது முதன்மையாகத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இது ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த ஒப்பந்தங்களின் கீழ், இத்தகைய சேர்மங்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதாரணமாக சட்டத்திற்கு உட்பட்டு தங்கத்திற்கு 6 சதவீதம் வரையில் வரி வசூலிக்கப்படுகிறது.

வெளியான உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில், ஜனவரி-மார்ச் 2025 காலாண்டில் திரவத் தங்கத்தின் இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது.
ரூ 906 கோடி வரி இழப்பு
இந்த மூன்று மாதங்களில் மட்டும் 69,879 கிலோ திரவத் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 9.25 மடங்கு அதிகம். இதன் மொத்த மதிப்பு தோராயமாக 1.29 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
2021 நிதியாண்டில் வெறும் 2,143 கிலோவாக இருந்த திரவத் தங்க இறக்குமதி, 2025 நிதியாண்டில் 127,886 கிலோவாக அதிகரித்துள்ளது. ஆனால், திரவத் தங்கத்துடன் ஒப்பிடும்போது, இறக்குமதி செய்யப்பட்ட வழக்கமான தங்கத்தின் அளவு 51.2 சதவீதம் சரிவடைந்து, 9.5 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.

இந்த நிலையில், நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில், திரவத் தங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் தூய தங்கத்தின் அளவு சராசரியாக 15 சதவீதம் மட்டுமே.
இதனடிப்படையில், 2024-25 நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 111,856 கிலோ திரத் தங்கத்திலிருந்து தோராயமாக 16,778 கிலோ தூய தங்கம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோவுக்கு சராசரியாக ரூ 90 லட்சம் என்ற விகிதத்தில், அரசாங்கத்திற்கு சுமார் ரூ 906 கோடி சுங்க வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |