டி20 உலகக்கோப்பை! ஸ்காட்லாந்தை விரட்டியடித்து வென்ற இந்தியா... ஒரே போட்டியில் படைத்துள்ள பல புதிய சாதனைகள்
உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய இந்தியா பல புதிய மைல்கல்களை எட்டியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 85 ரன்களில் சுருண்டது. அடுத்து விளையாடிய இந்தியா 6.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை தொட்டது.
இந்த போட்டியின் மூலம் பல புதிய சாதனைகளை இந்தியா படைத்துள்ளது.
இந்த போட்டியில் 81 பந்துகள் மீதம் இருக்க இந்தியா வெற்றி பெற்றது. ஒரு டி20 போட்டியில் அதிக பந்துகள் மீதம் உள்ள நிலையில் இந்தியா பெற்ற சிறந்த வெற்றி இதுவாகும்.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக பந்துகள் மீதம் இருந்து இந்தியா பெற்ற பெரிய மூன்றாவது வெற்றி இதுவாகும். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இலங்கையும், இரண்டாமிடத்தில் அவுஸ்திரேலியாவும் உள்ளன.
டி20 உலகக்கோப்பை பவர் ப்ளேவில் அதிக ரன்களை எடுத்த ஐந்தாவது அணி என்ற பெருமையை இந்தியா நேற்றைய ஆட்டத்தின் மூலம் பெற்றது. பவர் ப்ளேவின் போது இந்தியா 2 விக்கெட்கள் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்றைய போட்டியில் கே. எல் ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.