பிரான்சில் 1987ம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 39 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருக்கு சிறை தண்டனை
Little Martyr of the A10 case Parents jailed after 39 years: பிரான்சில் 4 வயது சிறுமி சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 39 ஆண்டுகளுக்கு பிறகு அவரது பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சடலமாக கிடந்த 4 வயது சிறுமி
1987ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி மத்திய பிரான்சின் Suèvres பகுதியின் A10 நெடுஞ்சாலையில் 4 வயது சிறுமி இனாஸ் தௌலூப்பின் (Inass Touloub) ஒருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு, மனிதர்கள் கடித்த தழும்புகள் மற்றும் இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்ட காயங்கள் அதிக அளவு இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

அப்போதைய நேரத்தில் பொலிஸாரால் சிறுமியின் அடையாளம் மற்றும் பெற்றோரை அடையாளம் காண முடியவில்லை. நீண்ட கால தேடுதலுக்கு பிறகு இந்த வழக்கானது கைவிடப்பட்டது.
எதிர்பாராத டிஎன்ஏ பரிசோதனை
பல ஆண்டுகளாக எந்தவொரு முன்னேற்றமும் இன்றி முடங்கி கிடந்த இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக கடந்த 2018ம் ஆண்டு வேறொரு வழக்கு தொடர்பான விசாரணையின் போது நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில், சிறுமி இனாஸ் தௌலூப்பின் சகோதரரின் மரபணு ஒத்து போகியுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டே சிறுமி இனாஸ் தௌலூப்பின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து நவம்பர் 2ம் திகதி இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கியது.

பெற்றோர்களுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
லுவார்-எட்-ஷெர் (Loir-et-Cher) குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த பல மணி நேர விசாரணைக்கு பிறகு, செவ்வாய்க்கிழமை சிறுமியின் தாயான 72 வயது ஹலிமா எல் பக்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை அகமது தெளலூப்பிற்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருவர் மீதும் கொல்லும் நோக்கம் இல்லாமல் கொடூர செயல்கள் மற்றும் சித்திரவதை செய்து மரணம் விளைவித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டனையானது வழங்கப்பட்டுள்ளது என பிரான்ஸ் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.