இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் - அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ( 21) காலை 10.00 மணிக்கு தொடங்க உள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று (21) மாலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் 27 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு
இதன்படி, செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசிப்பார்.
முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும்.
இந்தச் செயற்பாடுகள் முடிவடைந்ததும் நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 சரத்துக்களுக்கு அமைய, தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்.
முற்பகல் 11.00 மணிக்கு சகல விருந்தினர்களும் தமது இருக்கைகளில் அமரவைக்கப்படவுள்ளனர்.
முற்பகல் 11.10 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் சபாநாயகர் வரவேற்கப்படவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முற்பகல்; 11.15 மணிக்கு பிரதமர் வரவேற்கப்படவிருப்பதுடன், இதன் பின்னர் ஜனாதிபதியின் வருகை இடம்பெறும்.
முற்பகல், 11.20 மணியளவில் சபாநாயகர், நாடாளுமன்றச் செயலாளர்நாயகம் குசானி ரோஹணதீர உள்ளிட்டோர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகில் வரவேற்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர் ,நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |