பெண்ணின் மூளைக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட புழு... மருத்துவ வரலாற்றில் முதல் முறை
வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற ஒரு பெண்ணின் மூளையிலிருந்து உயிருடன் புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்று வலிக்காக மருத்துவமனை சென்ற பெண்
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் 64 வயதுடைய பெண்மணி ஒருவர், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வறட்டு இருமலும் இரவு நேரங்களில் கடுமையான வியர்வையுமாக, வித்தியாச வித்தியாசமான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் ஒவ்வொரு பிரச்சினையாக ஆராய்ந்துகொண்டே வர, 2022இல் கூடுதலாக அவருக்கு மறதியும் மன அழுத்தமும் ஏற்படவே, அவரது மூளையை ஒரு MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடலாம் என முடிவு செய்துள்ளார்கள் அவர்கள்.
ஸ்கேனில் தெரியவந்த விடயம்
MRI ஸ்கேன் முடிவுகள், அந்தப் பெண்மணியின் மூளையின் முன் பகுதியில் ஏதோ காயம் ஏற்பட்டுள்ளதைக் காண்பிக்க, அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின்போது, சிவப்பு நிறத்தில் ஏதோ நூல் போல இருப்பதை மருத்துவர்கள் கவனிக்க, அது சட்டென அசைந்துள்ளது. அப்போதுதான் அது ஒரு புழு என்பதை மருத்துவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
8 சென்றிமீற்றர் நீளமுடைய அந்த புழுவை மருத்துவர்கள் அகற்றியுள்ளார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் புழு அகற்றப்பட்டபின், அந்தப் பெண்ணுக்கு மறதிப் பிரச்சினையும், மன அழுத்தமும் குறையத் துவங்கிவிட்டன என்பதுதான்.
மருத்துவ வரலாற்றில் முதல் முறை
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், Ophidascaris robertsi என்னும் அந்த உருண்டைப்புழு, அவுஸ்திரேலியாவின் சில மாகாணங்களில் மட்டும் காணப்படும் carpet pythons என்னும் ஒருவகை மலைப்பாம்புகளின் வயிற்றுக்குள் மட்டுமே காணப்படும்.
ஆக, அந்தப் பெண், சாலட் எதையோ சாப்பிடும்போது, அந்த பாம்பின் கழிவு பட்ட இலை எதையாவது சாப்பிட்டிருக்கலாம். அந்த இலையிலிருந்த அந்த உருண்டைப்புழுவின் முட்டையையும் சேர்த்து அவர் சாப்பிட்டிருக்கக்கூடும். அதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
மருத்துவ வரலாற்றில் இப்படி அந்த புழு மனித மூளையில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பிரச்சினை என்னவென்றால், இதுபோன்ற விடயங்கள் எதிர்காலத்திலும் நிகழலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவும்போதுதான், கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவும் என்பதால், இந்த கண்டுபிடிப்பு சற்று அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |