லிவர்பூல் நகர மையத்தில் கத்திக்குத்து: 3 சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு
Liverpool Triple Stabbing Police Hunt 3 Suspects: லிவர்பூல் நகர மையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 3 சந்தேக நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லிவர்பூல் நகர மையத்தில் கத்திக்குத்து
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரித்தானியாவின் லிவர்பூல் நகர மையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 3 ஆண்கள் படுகாயமடைந்தனர்.
செப்டம்பர் 20ம் திகதி காலை 6.35 மணியளவில் டைத்பார்ன்(Tithebarn) நகர தெருவில் கத்திக்குத்து தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து அவசரகால சேவையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
எபெர்லே தெருவில்(Eberle Street) உள்ள ஜி-பார்(G-Bar) விடுதிக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அது விடுதிக்கு வெளியே வன்முறையாக வெடித்தது.

இந்த வன்முறையில் 3 ஆண்கள் வரை காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் ஒருவரின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக மெர்சிசைடு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
3 சந்தேக நபர்களுக்கு வலைவீச்சு
இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இவர்கள் பதின்ம வயது முதல் 30 வரையிலான 3 வெள்ளை இன ஆண்கள் என காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் அவர்களை கைது செய்வதற்கான தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.