பெங்களுருவில் அமையவுள்ள லிவர்பூல் பல்கலைக்கழக வளாகம்
இந்தியா மற்றும் பிரித்தானியா இடையேயான உறவுகள் வலுப்படும் நிலையில், பெங்களூருவில் லிவர்பூல் பல்கலைக்கழகம் தனது புதிய வளாகத்தை நிறுவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பிரித்தானியா “Vision 2035” திட்டத்தின் முதல் அமைச்சரவை மதிப்பீட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயலாளர் ய்வெட் கூப்பர் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பல்கலைக்கழகத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

“இது இந்தியாவின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமை துறையில் உலகளாவிய மையமாக வளர்வதற்கான முக்கிய முன்னேற்றம்” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
அதேபோல், கிங்ஸ் கல்லூரி லண்டன் மற்றும் இந்தியாவின் தேசிய கடல்சார் அறக்கட்டளை இணைந்து Regional Maritime Security Centre for Excellence அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
கல்வி அமைச்சர் பிரதான், “லிவர்பூல் போன்ற முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகம் அமைப்பது, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும். இது NEP 2020 நடைமுறையில் ஒரு முக்கிய மைல்கல்” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வளாகம் அமைப்பது, கல்வி துறையில் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இது இந்தியா-பிரித்தானியா Comprehensive Strategic Partnership-ஐ மேலும் ஆழப்படுத்தும்.
இந்த அறிவிப்பு, இந்தியாவின் “Global Hub of Learning” இலக்கை அடைய முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |