ரிஷி சுனக் பிரதமர் கனவு தவிடுபொடி? கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் வெளிப்படை
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு கன்சர்வேடிவ் கட்சியில் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை உச்சத்தில் இருந்த ரிஷி சுனக் திடீரென்று கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 62% பேர்கள் வெளிவிவகார அமைச்சர் லிஸி டிரஸ் நாட்டின் புதிய பிரதமராக வேண்டும் என தெரிவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, வெறும் 38% பேர்கள் மட்டுமே ரிஷி சுனக் பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ரிஷி சுனக் பெற்றிருந்தாலும், தற்போது பதிவு செய்த கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற ரிஷி சுனக் தவறியதாகவே கூறப்படுகிறது.
பிரதமருக்கான போட்டியில் முதல் இரண்டு இடங்களில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் எட்டியதை நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து முதல் முறையாக இந்த கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளது.
ரிஷி சுனக்கை விட அனைத்து வயதினர் இடத்திலும், ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களிலும் லிஸ் டிரஸ் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார். கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகளை பெற்றிருந்தாலும், நாட்டின் பிரதமரை தெரிவு செய்யும் பொறுப்பில் கட்சி உறுப்பினர்களுக்கும் பங்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெளியான முதற்கட்ட கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக் பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் அவர் இனி கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இன்னொரு பேரிடியாக, ரிஷி சுனக்கை நம்ப முடியாது என 40% கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
போரிஸ் அமைச்சரவையில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்த பின்னர், சுமார் 50 அமைச்சர்கள் பதவி விலகியதுடன், வேறு வழியின்றி போரிஸ் ஜோன்சன் ராஜினாமா செய்யும் மிக நெருக்கடியான சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.