விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் பிரித்தானிய மக்கள்... 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரணத் திட்டத்துடன் லிஸ் ட்ரஸ்
பிரித்தானிய மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரத் திட்டம்
எரிவாயுவின் மொத்த விலையை கட்டுப்படுத்தி, அதனால் எரிசக்தி கட்டணம் குறைக்க வாய்ப்பிருப்பதாக லிஸ் ட்ரஸ்
பிரித்தானியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரணத் திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவாகியுள்ள நிலையில், முதல் வாரத்திலேயே அமுலுக்கு கொண்டுவரும் திட்டங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
இதில் விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் பிரித்தானிய மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரணத் திட்டம் மற்றும் வரிகள் குறைப்பு உள்ளிட்டவை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பிரதமராக பொறுப்பேற்கும் முதல் வாரத்திலேயே எரிசக்தி கட்டண உயர்வு தொடர்பில் முக்கிய முடிவெடுக்கப்படும் என அவர் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். தற்போது விலைவாசி உயர்வு தொடர்பிலும் உரிய முடிவெடுக்கப்படும் என அவர் கூறியதாக லிஸ் ட்ரஸ் தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் மொத்த விலையை கட்டுப்படுத்தி, அதனால் எரிசக்தி கட்டணம் குறைக்க வாய்ப்பிருப்பதாக லிஸ் ட்ரஸ் கருதுகிறார். ஆனால், இந்த முடிவால் பல நிறுவனங்கள் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, நமது நாட்டை எவரும் இனி மட்டம் தட்ட அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள லிஸ் ட்ரஸ், அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களது திறமைக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
@reuters
பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் லிஸ் ட்ரஸ், நாளை ஸ்கொட்லாந்துக்கு புறப்பட்டு சென்று ராணியாரை சந்திக்க இருக்கிறார். மட்டுமின்றி, புதிய அமைச்சரவையில் உட்படுத்தப்பட வேண்டிய நபர்களின் பட்டியலையும் லிஸ் ட்ரஸ் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாட்டின் மிக முக்கியமான நான்கு பொறுப்புகளுக்கு வெள்ளையர்கள் அல்லாத தலைவர்களுக்கு லிஸ் ட்ரஸ் வாய்ப்பளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சேன்ஸலர் பொறுப்புக்கு Kwasi Kwarteng வரலாம் எனவும், வெளிவிவகார அமைச்சராக James Cleverly நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் உள்விவகார செயலராக Suella Braverman தெரிவாகலாம் எனவும் கூறப்படுகிறது.