நான் பிரதமரானால்... பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் டிரஸ் முக்கிய வாக்குறுதி
பிரித்தானியாவின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சிக்குள் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் தற்போது தங்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக கட்சி தம்மை தெரிவு செய்தால், மொத்த பிரித்தானியாவுக்கும் பயனளிகும் வகையில், 2023 இறுதிக்குள் பிரெக்ஸிட்டிற்குப் பிறகு தக்கவைக்கப்பட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களையும் மறுபரிசீலனை செய்வதாக வெளிவிவகார அமைச்சர் லிஸ் டிரஸ் உறுதியளித்துள்ளார்.
மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாகக் கருதப்படுபவற்றை நீக்க அல்லது மாற்றவும் தாம் தயார் என அவர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, NHS அமைப்பின் பின்னடைவைச் சமாளிக்கும் திட்டங்களை விரவு படுத்த இருப்பதாக இன்னொரு பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெருவாரியான ஆதரவை நாட்டின் முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக் கைப்பற்றியுள்ளார்.
ஆனால் பதிவு செய்யப்பட்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் பங்குபெற்ற தனியார் கருத்துக்கணிப்பு ஒன்றில், ரிஷி சுனக் கடும் பின்னடவை சந்தித்துள்ளார்.
வெறும் 38% கட்சி உறுப்பினர்களே ரிஷி சுனக் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால் லிஸ் டிரஸ் 62% ஆதரவைப் பெற்று கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முன்னணியில் உள்ளார்.
தற்போது இருவரும், கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். பதிவு செய்துள்ள கட்சி உறுப்பினர்களின் தபால் வாக்கும், பிரதமர் தெரிவில் முக்கிய பங்காற்ற உள்ளது.
இந்த நிலையில் தமது ஆதரவாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், உண்மையான மாற்றம் நம்மை காத்திருக்கிறது எனவும், அதை நான் உறுதி செய்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.