இலங்கையில் மீண்டும் ஓர் தேர்தல் - தீர்மானத்தை வெளியிட்ட அரசாங்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனினும், இந்த ஆண்டு இந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் ஒதுக்கப்படவில்லை” என்றார்.
“எனவே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும். பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக வேட்புமனுக்களை கோருவதா, இல்லையா என்பது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |