சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: 50 சதவிகித உணவகங்கள் திவாலாகும் அபாயம்!
சுவிஸ் அரசாங்கம் இந்தவாரம் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனால் சுவிட்சர்லாந்தில் 50 சதவிகித உணவகங்கள் திவாலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்து முழுவதும் பிப்ரவரி மாத இறுதிவரை உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், சரியான பொருளாதார உதவியும் இல்லாத நிலையில், மார்ச் மாதத்திற்குள் கிட்டத்தட்ட பாதி உணவகங்கள் திவாலாகலாம் என உணவகத்துறை அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
அந்த அமைப்பு 4,000 உணவக உரிமையாளர்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில், அவர்களில் 98 சதவிகிதத்தினர் அவசர நிதி தேவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் பலர் காணாமலே போகும் அபாயம் உள்ளது என அந்த அமைப்பின் தலைவரான Casimir Platzer தெரிவித்துள்ளார்.
முதல் கொரோனா அலையால் நாடு முடக்கப்பட்டபோது, உடனடியாக நிதியுதவி கிடைத்தது. ஆனால், இரண்டாவது கொரோனா அலையின்போது உதவி தாமதிக்கிறது என்று கூறியுள்ளார் Casimir Platzer.