மொத்தமாக ஸ்தம்பித்த லண்டன்... ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
பிரித்தானிய தலைநகர் லண்டனில் திடீரென்று ஏற்பட்ட மின் தடை காரணமாக மொத்த நகரமும் ஸ்தம்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் சுமார் 37 அஞ்சல்குறியீடு பகுதிகளில் உள்ள 5,000 குடியிருப்புகள் இதனால் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி 12.30 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், உயர் மின்னழுத்த நிலத்தடி மின்சார கேபிள் பழுதடைந்ததாலையே இவ்வாறு மின் தடை ஏற்பட்டதாகவும் தொடர்புடைய நிறுவனத்தின் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், Vauxhall, Bermondsey, மற்றும் Westminster ஆகிய பகுதிகளில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, கிழக்கு லண்டனுக்கு வெளியே உள்ள பகுதிகளும் மின் தடையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மதியத்திற்கு மேல் 3 மணியளவில் தான் சரி செய்யப்படும் எனவும் அந்த நிறுவன இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதேப்போன்று, பெரும் மின்வெட்டுக்கு மத்தியில் இருளில் அமர்ந்து இரவைக் கழித்த ஆயிரக்கணக்கானோரிடம் மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனம் மன்னிப்புக் கோரியிருந்தது.
அப்போதும் சுமார் 38 அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. Stanmore, Harrow, Wembley மற்றும் Borehamwood ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.