லண்டனில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் புகைப்படம் வெளியானது!
லண்டனில் வியாழன் அன்று கத்தியால் குத்தி கொல்லப்பட்ட 15 வயது சிறுவனின் பெயர் மற்றும், புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தெற்கு லண்டனில், Croydon பகுதியில் உள்ள Ashburton பூங்காவில், வியாழக்கிழமை இரவு 7.30க்கு இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இதில் 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் இதயத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயம்தான் சிறுவனின் மரணத்திற்கான காரணம் என லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்தில் நேரடி தொடர்புடையவராக, சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், துப்பறியும் தலைமை இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் லியோனார்ட் உயிரிழந்த சிறுவன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, உயிரிழந்த சிறுவனின் பெயர் Zian Aimable-Lina. ஜயனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்த இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட், ஜயனின் குடும்பத்திற்கு தகுதியான பதில் கூறவே, காவல்துறையினர் 24 மணி நேரமும் இந்த கொலை தொடர்பான விசாரணையில் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஜயனின் மரணம் உள்ளூர் சமூகம் மற்றும் லண்டன் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது, என்று அவர் கூறினார்.
Picture: Metropolitan Police
மேலும், 'எவ்வளவு அற்பமானதாக நீங்கள் நினைத்தாலும், இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு உதவக்கூடிய தகவல்கள் இருந்தால், உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
தகவல் தெரிந்தவர்கள் கிரைம்ஸ்டாப்பர்களை 0800 555 111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.