காய்ச்சல் என மருத்துவரை நாடிய லண்டன் நபர்... 6 வாரம் கோமாவில்: கண் விழித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கிழக்கு லண்டனை சேர்ந்த தந்தை ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவரை நாடியுள்ள நிலையில், ஒரு கால் மற்றும் ஒரு கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுயநினைவின்றி சரிந்து விழுந்தார்
கிழக்கு லண்டனின் Ilford பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஜுனைத் அகமது. சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் மருத்துவரை நாட முடிவு செய்து மருத்துவமனை சென்றுள்ளார்.
Image: SWNS
காத்திருக்கும் அறையில் சக நோயாளிகளுடன் காத்திருந்த நிலையில், திடீரென்று ஜுனைத் அகமது சுயநினைவின்றி சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து, மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை முன்னெடுத்ததில், அவருக்கு செப்சிஸ் பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அதுவே, அவரது கல்லீரல், இதயம் மற்றும் நுரையீரலை செயலிழக்கச் செய்துள்ளது. இதனையடுத்து மருத்துவ ரீதியான கோமாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 6 வாரங்கள் கோமாவில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜுனைத் கண்விழித்த போது மொத்தமாக அதிர்ந்து போயுள்ளார்.
அவரது உயிரை காப்பாற்ற, இக்கட்டான சூழலில் அவரது ஒரு கால், ஒரு கை என துண்டிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் வாழ வேண்டும்
மருத்துவமனைக்கு செல்லும் முன்னர் தமது மனைவியுடன் ஒன்றாக உணவருந்திய நிமிடங்கள் மட்டுமே நினைவில் இருந்தது எனவும், ஆனால் கோமாவில் இருந்து கண்விழித்த பின்னர், கேட்டவை அனைத்தும் பயத்தையும் குழப்பத்தையும், வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சியையும் அளித்தது என்றார் ஜுனைத்.
Image: SWNS
மேலும், தமது குடும்பத்துடன் வாழ வேண்டும், உயிரை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என மருத்துவர்களிடம் கூறியதாக ஜுனைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மேலும் 8 மாதங்கள் சிகிச்சையில் இருந்துள்ள ஜுனைத், தற்போது ஒரு கால் மற்றும் கை இல்லாமல், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டு, தற்போது பிறர் உதவி இன்றி நடக்க முடியும் என்ற கட்டத்திற்கு வந்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.