லண்டனில் யூதர்கள் மீது தாக்குதல்: பிரித்தானிய அரசு மீது இஸ்ரேல் அதிருப்தி
லண்டனில் யூதர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரித்தானியா-இஸ்ரேல் இடையே இராஜதந்திர சலசலப்பு தலைதூக்கியுள்ளது.
லண்டனில் யூதர்கள் மீது தாக்குதல்
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன்(Golders Green) பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் யூத சமூகத்தை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை டேசர்(Taser) துப்பாக்கியை பயன்படுத்தி பொலிஸார் நிலைகுலைய செய்து பின்னர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, வன்முறை சம்பவம் தொடர்பாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து இருப்பதோடு, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அதிருப்தி
இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பிரித்தானிய அரசு மீது தங்களது அதிருப்தியை இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட தகவலில், பிரித்தானிய அரசு இந்த விவகாரத்தை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் அறிக்கை மட்டும் இதற்கு போதாது. பிரித்தானியாவில் அதிகரித்து வரும் யூத வெறுப்பு உணர்வை அதன் வேர் வரை சென்று அழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் யூதர்கள் தங்களை பாதுகாக்க தனி பாதுகாப்பையும், தன்னார்வலர்களையும் நம்பி இருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் யூத நிறுவனங்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவமானது அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |