லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு
கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் மீது, கொலை செய்ய முயன்றதாக இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை முயற்சி
சோமாலியாவில் பிறந்த பிரித்தானியக் குடிமகனான 45 வயது ஈசா சுலைமான் என்பவரே இரண்டு யூதர்களைத் தாக்கி கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவர் ஆஜராவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை அன்று வடக்கு லண்டனில் உள்ள கோல்டர்ஸ் கிரீனில் நடந்த தாக்குதல் தொடர்பாக, அவர் மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும், பொது இடத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தெற்கு லண்டனின் கிரேட் டோவர் தெருவில் அதே நாளில் முன்னதாக நடந்த மற்றொரு சம்பவம் தொடர்பாக, சுலைமான் மீது இன்று கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
கோல்டர்ஸ் கிரீன் தாக்குதலுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் அவர் சிறு காயங்களுடன் தப்பியிருந்தார்.
ஹைஃபீல்ட் அவென்யூ
இந்த நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையின் விசாரணையைத் தொடர்ந்து சுலைமான் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
ஹைஃபீல்ட் அவென்யூவில் மக்கள் கத்தியால் தாக்கப்பட்டதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 11.16 மணிக்கு கோல்டர்ஸ் கிரீனுக்கு காவல்துறை வரவழைக்கப்பட்டனர்.

சம்பவயிடத்திலேயே சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். 34 வயதான ஷ்லோய்ம் ராண்ட் மற்றும் 76 வயதான மோஷே ஷைன் ஆகியோருக்கு கத்திக்குத்து காயங்களுக்காக சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், மோஷே ஷைன் மட்டும் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |