லண்டன் மருத்துவமனைகளில் சரிபாதி பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
லண்டன் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை என்ன என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் பரவல் காரணமாக பிரித்தானிய மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிறிஸ்துமஸ் ஊரடங்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் லண்டனின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் உறுதி செய்யப்பட்ட 40 சதவிகிதம் வரையான புதிய கொரோனா தொற்றாளர்கள் மருத்துவமனைக்கு வேறு நோய்க்கான சிகிச்சைக்கு வந்த பிறகுதான் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது.
லண்டன் நகரத்தை பொறுத்தமட்டில் கொரோனா தொற்று நிரம்பியிருக்கிறது என்றும் ஆனால் பலருக்கும் அது தெரியாமல் இருப்பதாகவும் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் சர் டேவிட் ஸ்பீகல்ஹால்டர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்து கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களால் சுகாதார ஊழியர்களுக்கு இரட்டிப்பு வேலை எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதே நிலை நீடிக்கும் என்றால், எதிர்வரும் நாட்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்றே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் லண்டனில் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் ஆம்புலன்ஸ் சேவை மொத்தமாக ஸ்தம்பிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
ஓமிக்ரான் பரவலால் ஆம்புலன்ஸ் சேவை கடுமையான நெருக்கடியை தற்போது எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் தரவுகள்படி நேற்று மட்டும் லண்டனில் 1,819 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்களின் எண்ணிக்கை 77% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உரிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு தாமதிக்கும் என்றால், கூடியவிரைவில் நாளுக்கு 6,000 பேர்கள் வரையில் இறப்பு எண்ணிக்கை பதிவாகும் சூழல் உருவாகும் என நிபுணர்கள் தரப்பு தெரிவிவித்துள்ளது.