பள்ளி சீருடையில் மாயமான 12 வயது சிறுவன்... லண்டன் பொலிஸ் வேண்டுகோள்
லண்டனில் திடீரென்று மாயமாகியுள்ள 12 வயது சிறுவன் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பள்ளி சீருடையில்
கடுமையான குளிர் வீசும் டிசம்பர் மாத இரவில் குறித்த சிறுவன் லண்டன் தெருக்களில் தனித்துவிடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு கவலை தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லண்டனின் நியூஹாமில் நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு யாஃபியை உறவினர் ஒருவர் கடைசியாகப் பார்த்துள்ளார். இந்த நிலையில், சிறுவன் மாயமான தகவல் குடும்பத்தினருக்கு தெரிய வரவும், உள்ளூர் சுற்றுவட்டாரத்தில் தேடியுள்ளனர்.
அத்துடன் யாஃபியின் நண்பர்கள் அனைவருக்கும் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இதில் ஏமாற்றமடைந்த குடும்பத்தினர் இரவு 8.38 மணிக்கு பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே பொலிசார் சிறுவனைத் தேடும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாஃபி தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை.
கடைசியாக கார்ட்டூம் சாலையில் யாஃபியை பார்த்துள்ளனர். பள்ளி சீருடையில் காணப்படும் யாஃபியிடம் அலைபேசி இல்லை என்றே குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த இன்ஸ்பெக்டர் சாம் லாக்ஸ்டோன், யாஃபி மாயமான நொடியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் கடந்து செல்லும்போது, நாங்கள் மேலும் மேலும் கவலைப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஆசிய தோற்றமுடையவர்
மேலும், இது முற்றிலும் அவரது குணாதிசயத்திற்கு அப்பாற்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர், கடும் குளிர் வீசும் இரவில், அலைபேசி இல்லாமல் தனது பள்ளிச் சீருடையில் கிழக்கு லண்டனின் தெருக்களில் அவர் தனித்துத் தடுமாறலாம் என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்களும், யாஃபியைப் பார்த்திருக்கலாம் என்று நினைப்பவர்களும் உடனடியாக காவல்துறைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்வதாகவும், நீங்கள் அளிக்கும் தகவல்கள் தொடர்புடையை சிறுவனைக் காப்பாற்ற வாய்ப்பாக அமையும் என்றார்.

அத்துடன், யாஃபியின் ஏதேனும் அறிகுறிகளுடன் தொடர்புடைய அல்லது, உறுதியாக தெரியாவிட்டாலும், அவராக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் ஒருவரைக் கண்டால், தயவுசெய்து உடனடியாக பொலிசாரை அழைக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாஃபி பழுப்பு நிற முடியுடன் ஆசிய நாட்டவருக்கான தோற்றமுடையவர், சுமார் 5 அடி 4 அங்குல உயரம், நடுத்தர உடலமைப்பு கொண்டவர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஃபி மாயமானதாக தகவல் தெரிவிக்கப்படும்போது நியூஹாமில் வெப்பநிலை -2C என பதிவாகியிருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |