தொடர் சர்ச்சையால் லண்டன் காவல்துறை ஆணையர் பதவி விலகல்!
லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் டேம் கிரெசிடா டிக் (Dame Cressida Rose Dick), தொடர்ச்சியான சர்ச்சைகளுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) அவரது தலைமையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய பிறகு, தனக்கு "வேறு வழியில்லை" என்று கூறிய டேம் கிரெசிடா இந்த முடிவை எடுத்துள்ளார்.
கடந்த வாரம், பாலியல், இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை மொழியைப் பயன்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் அனுப்பிய செய்திகளை காவல்துறை கண்காணிப்புக்குழு வெளியிட்டது.
இதனையடுத்து, மேயர் சாதிக் கான் மெட் பொலிஸ் கமிஷனரான கிரெசிடாவுக்கு 'நோட்டிஸ்' அனுப்பினார். அந்த அறிக்கையில், நகரத்தில் காவல்துறையின் இத்தகைய நடத்தையை கையாள்வதற்கான ஒரு வலுவான திட்டத்தை கொண்டு வருவதில் ஆணையர் மீது முழு நம்பிக்கை வைத்திருந்ததாக மேயர் கூறினார்.
[]
ஆனால், ஆணையரின் பதிலில் திருப்தி அடையவில்லை என்று கூறிய அவர், வியாழன் மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுபற்றித் தெரிவிக்கப்பட்டதும், டேம் கிரெசிடா டிக் ஒதுங்கி நிற்பதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நகரத்திற்கு தேவையான மாற்றத்தை வழங்கவதற்கான ஒரே வழி, பெருநகர காவல்துறையின் உயர்மட்டத்தில் புதிய தலைமையை நியமிப்பது தான் என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக வியாழன் மாலை 4.30 மணியளவில் சாதிக் கான் ஆணையரை ஒரு கூட்டத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. அவர் அதில் கலந்து கொள்ளவில்லை - அதற்கு பதிலாக தனது ராஜினாமாவை சமர்பித்தார் டேம் கிரெசிடா.
பின்னர், தனக்கு "வேறு வழியில்லை" என்று உணர்ந்ததாகவும், ஆனால் "மிகுந்த சோகத்துடன்" தான் பதவி விலகுவதாகவும் டேம் கிரெசிடா கூறினார்.
மேலும் "மேயருக்கு இனி எனது தலைமையின் மீது போதுமான நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது," என்று அவர் கூறினார்.
டேம் கிரெசிடா லண்டனில் மெட்ரோபொலிட்டன் காவல் சேவையை வழிநடத்தும் முதல் பெண் மற்றும் முதல் ஓரினச்சேர்க்கை அதிகாரி ஆவார்.