101 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில்... ஐரோப்பாவிலேயே மிக நெரிசலான சாலை அமைந்துள்ள நகரம்
லண்டனில் அமைந்துள்ள சாலைகள் ஐரோப்பாவிலேயே மிகவும் நெரிசலானவை என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 2024ல் சுமார் 101 மணிநேரம் லண்டன் சாரதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆண்டுக்கு 942 பவுண்டு
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாவதால் பொருளாதார ரீதியாக ஒவ்வொரு சாரதியும் சராசரியாக ஆண்டுக்கு 942 பவுண்டுகளை இழப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, லண்டன் நகருக்கு ஏற்படும் இழப்பு என்பது ஆண்டுக்கு 3.85 பில்லியன் பவுண்டுகள் என்றே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பிரான்சின் பாரிஸ் நகரம் ஐரோப்பாவில் இரண்டாமிடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 97 மணிநேரம் சாரதிகள் சாலையில் செலவிட்டுள்ளனர். டப்ளின் நகர சாரதிகள் சராசரியாக 81 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.
உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் வரிசையில் 5ம் இடத்தில் லண்டனும், முதல் இடத்தில் இஸ்தான்புல் நகரமும் தெரிவாகியுள்ளது. பிரித்தானியாவில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலைக் கொண்ட இரண்டாவது நகரமாக பிரிஸ்டல் தெரிவாகியுள்ளது.
1 மணிநேரம் அதிகம்
ஒவ்வொரு சாரதியும் சராசரியாக 65 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். லீட்ஸ் நகரில் 60 மணிநேரம் என்றும் நான்காவது இடத்தில் மான்செஸ்டர் நகரமும் தெரிவாகியுள்ளது.
பிரித்தானியா முழுவதும், கடந்த ஆண்டு சராசரியாக சாரதி ஒருவர் 62 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் கழித்துள்ளார். 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 1 மணிநேரம் அதிகம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |