லண்டன் இளம்பெண் கொலை வழக்கு... தலையில் படுகாயத்துடன் சுயநினைவின்றி கிடந்த பொலிசார்: தற்கொலை முயற்சியா?
லண்டன் இளம்பெண் கொலையில் குற்றவாளி என கருதப்படும் பொலிசார் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சுயநினைவின்றி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
லண்டனைச் சேர்ந்த Sarah Everard என்ற இளம்பெண் மாயமான வழக்கில், அவருடையவை என கருதப்படும் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன.
கிடைத்துள்ள உடல் மோசமாக சேதமடைந்துள்ளதால், அதிலுள்ள பற்களின் அடிப்படையில் மட்டுமே அந்த உடல் Sarahவுடையதுதானா என ஆராயவேண்டியுள்ளது என்றும், அதற்கு பல வாரங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sarah வழக்கில் குற்றவாளி என கருதப்படும் பொலிசாரான Wayne Couzens கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Wayneக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் அடைக்கப்பட்டுள்ள அறைக்குள் வேறு யாரும் செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தன்னைத்தான் காயப்படுத்திக்கொண்டுள்ளார் என கருதப்படுகிறது.
அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து இப்போதைக்கு பேசப்போவதில்லை என விசாரணை அதிகாரிகள் கூறிவிட்டார்கள்.
இதற்கிடையில், காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர் இப்படி காயமடைந்துள்ளதால், புதிதாக காவல் நிலைய பாதுகாப்பு தொடர்பில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
காரணம், காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருப்பவரை பொலிசார் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிக்கவேண்டும் என்பது விதி! இதற்கிடையில், உணவகம் ஒன்றில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக புதிதாக ஒரு குற்றச்சாட்டு Wayne மீது சுமத்தப்பட்டுள்ளது.


