பிரித்தானியாவில் யூனிஸ் புயலால் 4 பேர் மரணம்
பிரித்தானியாவில் யூனிஸ் புயலின் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
யூனிஸ் புயல் மணிக்கு 122 மைல் வேகத்தில் பிரித்தானியாவைத் தாக்கி வருவதால் மரங்கள் மற்றும் இடிபாடுகள் விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் மில்லியன் கணக்கானவர்களுக்கு பரவலான சேதத்தையும் பயணக் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இங்கிலாந்தின் பல பகுதிகளில் சுவர்கள், மின் கம்பங்கள் இடிந்து விழுந்துள்ளன மற்றும் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. யூனிஸ் புயல் (Storm Eunice) பல இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
அயர்லாந்து குடியரசின் வெக்ஸ்ஃபோர்டில் கவுண்டியில், அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மரம் விழுந்து விழுந்ததில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்தார்.
அதேபோல் ஹாம்ப்ஷயரில், ஆல்டன் என்ற சந்தை நகரத்தில் ஒரு பெரிய மரம் வாகனத்தின் மீது விழுந்து நசுக்கியதில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடன் நசுங்கி பலியானார்.
மூன்றாவதாக, மாலை 4 மணியளவில் வடக்கு லண்டனின் ஹரிங்கியில் உள்ள மஸ்வெல் ஹில் சாலையில் கார் மீது மரம் விழுந்ததில், காரை ஓட்டிவந்த 30 வயதான பெண் உடல் நசுங்கி பலியானார். மேலும் மற்றோரு 30 வயது மதிக்கத்தக்க ஆண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், நெதர்டனில், மெர்சிசைடில், 50 வயதுடைய நபர் உயிரிழந்தார். அவர் பயணித்த வாகனத்தின் கண்ணாடியை குப்பைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் புயலின் நான்காவது பலியாக மாறினார்.
இந்நிலையில், வாகனத்தின் சாரதி காயமடையாத நிலையில், பெயர் குறிப்பிடப்படாத பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மெர்சிசைட் பொலிஸார் தெரிவித்தனர்.





