தனது சொந்த இறப்புச் சான்றிதழுக்காக விண்ணப்பித்த லண்டன் பெண்! அடுத்தடுத்து அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்
லண்டனில் வாகன விபத்தை ஏற்படுத்தும் வழக்கில் சிக்கிய பெண் அதிலிருந்து தப்பிக்க செய்த மோசடியால் தற்போது வேறு வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
ஸோ பெர்னார்டு என்ற 38 வயதான பெண் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வண்டியை தாறுமாறாக ஓட்டி வந்தார். தையடுத்து, காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவரது வாகனத்திற்கு இன்சூரன்சும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், ஸோ பெர்னாடுவை காவல் துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். ஆனால், இந்த சமயத்தில் தான் ‘நான் அவன் இல்லை’ என்ற படத்தில் வருவதைப் போல பேசத் தொடங்கினார். அதாவது, சானைஸ் பெர்னார்டு என்ற பெயரில், நீதிமன்றத்தில் ஆஜரான அந்தப் பெண், தனது சகோதரி ஸோ பெர்னார்டு இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அவரது வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இறப்புச் சான்றிதழுக்கும் அவர் விண்ணப்பம் செய்திருந்தார். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, தன்னை கெய்சா பெர்னார்டு என்ற பெயரில் அவர் அறிமுகம் செய்திருந்தார்.
இப்படி தொடர்ச்சியாக பெயர் குழப்பம் ஏற்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை தாமதமாகியது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய காவல் துறை அதிகாரி கூறுகையில், “விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பெர்னார்டுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தோம்.
அப்போது 2020ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி வரையில், பல சந்தர்பங்களில் என்னை தொடர்பு கொண்டு பேசிய பெண், தன்னை சானிஸ் பெர்னார்டு என அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடைய சகோதரி ஸோ பெர்னார்டு இறந்து விட்டதாகக் கூறினார் என்று தெரிவித்தார்.
இறுதியாக ஸோ பெர்னார்டு என்ற ஒரே பெண் தான், பல ரூபங்களில் விளையாடி வருகிறார் என்பதை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் அவரை காவல் துறையினர் ஆஜர் படுத்தினர். அப்போது, அவரது தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், காவல் அதிகாரி ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் ஸோ பெர்னார்டு. மேலும், அவருக்கு சிக்கில் செல் என்னும் நோய் உள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த வாதங்களை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு எட்டு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.