லண்டனில் பத்து நாட்களாக காணாமல் போன 20 வயது இளம்பெண் வழக்கில் திடீர் திருப்பம்! 63 வயதான முதியவர் கைது
லண்டனில் இளம்பெண் ஒருவர் பத்து நாட்களுக்கு மேலாக காணாமல் போன நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு லண்டனை சேர்ந்தவர் அக்னீஸ் அகோம் (20). இவர் கடந்த 9ஆம் திகதி காலை வீட்டில் இருந்து வெளியில் கிளம்பி சென்ற பின்னர் காணாமல் போயிருக்கிறார்.
அக்னீஸ் காணாமல் போனதாக கடந்த 11ஆம் திகதி பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டை சேர்ந்த அக்னீஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்.
அவரை தேடி வருவதாக பொலிஸார் கூறி வந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி அக்னீஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 63 வயதான நபரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
அக்னீஸுக்கு அவர் நன்கு அறிமுகமானவர் என பொலிஸார் கருதுகின்றனர். அந்த நபர் தற்போது வடக்கு லண்டனில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையில் அக்னீஸை யாராவது பார்த்திருந்தாலோ அவர் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலோ தங்களிடம் உடனே தெரிவிக்கும்படி பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.